Published : 28 Oct 2019 12:42 PM
Last Updated : 28 Oct 2019 12:42 PM

பாக்தாதியின் மரணம் ஒரு மைல்கல்; ஐஎஸ்க்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை: உலக நாடுகள் கருத்து

பாரீஸ்

சிரியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப்பிரிவு நடத்திய தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை இரவு ஐஎஸ் தீவிரவாதக் குழுத் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி மற்றும் அவரின் 3 மகன்கள், கூட்டாளிகள் பலர் உயிரிழந்ததாக அமெரிக்க அறிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாகத் தீவிரமான கண்காணிப்பிலும், தேடுதலிலும் இருந்த அல்-பாக்தாதியை அமெரிக்க ராணுவத்தின் கே9 டாக்ஸ் ஹெலிகாப்டர் பிரிவு சனிக்கிழமை இரவு கொன்றதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அல் பக்தாதி இறந்த செய்தியைப்பற்றி கூறுகையில், ''அவர் சுரங்கப் பாதையின் கடைசி முனைக்கு ஓடியபின் சிணுங்கினார், அழுகிறார், கத்தினார். கடைசியில் ஒரு நாயைப் போல இறந்துவிட்டார். அவர் தன்னிடம் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இறந்தார்.'' என்று குறிப்பிட்டார்.

ஐஎஸ் தீவிரவாதக் குழுத் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி தனது ஐந்து ஆண்டுகளில் ஈராக் மற்றும் சிரியாவின் 'கலீபாவாக' தன்னை அறிவித்துக் கொண்டார். அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு தலையைத் துண்டித்தல், மக்கள் கூட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக மரணதண்டனை அளித்தல், கற்பழிப்பு, கடத்தல் மற்றும் இன அழிப்பு ஆகியவற்றின் கொடூரமான பாதையை விட்டுச் சென்றுள்ளார்

ஐஎஸ் தீவிரவாதக் குழுத் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி மரணமடைந்த செய்தி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பக்தாதியின் மரணம் குறித்து வெளிவந்த செய்திகள் தொடர்பாக உலக நாடுகள் கூறியுள்ளதாவது:


துருக்கி: ‘திருப்புமுனை’

துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் ட்விட்டரில் கூறியதாவது:

"டீஷ் (ஐஎஸ் தீவிரவாதக்குழுவுக்கான அரபு சுருக்கம் டீஷ் என்ற சொல்) தலைவரைக் கொன்றது, பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் கூட்டுப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. துருக்கி - கடந்த காலங்களில் செய்ததைப் போல, பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு தீர்க்கமான போராட்டம், கூட்டணியின் லட்சியத்திற்கு ஏற்ப, மனிதகுலம் அனைவருக்கும் அமைதியைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்."

ஈரான்: இது ஐஎஸ் தீவிரவாதக்குழுவுக்கு இப்போது ஏற்பட்டுள்ள முடிவு முடிந்த முடிவு அல்ல.

ஈரான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் அலி ரபீ ட்விட்டர்:

"டீஷ் (ஐஎஸ்) பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்பது பக்தாதியின் மரணத்தோடு முடிந்துவிடுவதல்ல. ஆனால் இது ஒரு அத்தியாயத்தின் முடிவு தான். ஐ.எஸ் பயங்கரவாதம் இன்னும் இன்னும் வளர்ந்து வருகிறது.

அமெரிக்க கொள்கைகள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நடைபெற்று வரும் எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கும் அதை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கும் இடையில் யு.எஸ். டாலர்களுக்கான எண்ணெய் பரிமாற்றத்தின வழியாக வளர்ந்து, தக்ஃபிரி (சன்னி முஸ்லீம் தீவிரவாத) சித்தாந்தத்தில் உருவானது. இந்த மூன்றுமே அழிக்கப்பட வேண்டியது ஆகும்.

ரஷ்யா: பாக்தாதி மரணம் சந்தேகமாக இருக்கிறது

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கோனாஷென்கோவ் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாக்தாதியின் மரணம் குறித்த தகவல்கள் சந்தேகத்தை அளிக்கின்றன. இட்லிப் மாகாணத்தின் மோதல் நடந்துவரும் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நம்பகமான தகவல்கள் ஏதும் வரவில்லை

பாக்தாதி கொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும் முரண்பாடான விவரங்களை கொண்டிருக்கின்றன. இது அமெரிக்க நடவடிக்கையின் வெற்றி குறித்த நியாயமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன.

2018ல் ரஷ்ய விமானப்படை ஆதரவுடன் களமிறங்கிய சிரிய அரசாங்கத்துடன் ஐஎஸ் தீவிவாதக்குழுக்கள் மோதின. இதில் ஐஎஸ் தீவிரவாதக் குழுக்கள் இறுதித் தோல்வியை தழுவின.

அதன் பிறகு கூறப்படும் ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதியின் தெளிவான தகவல் அற்ற இந்த 'மரணம்' சிரியாவின் நிலைமைக்கும் அல்லது இட்லிப்பில் இயங்கிவரும் பயங்கரவாதிகளின் மீதமுள்ள செயல்களுக்கும் செயல்பாட்டு எந்தவித முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை.


பிரான்ஸ்: 'சண்டை மேலும் தொடரும்'

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ட்விட்டர்:

"அல்-பக்தாதியின் மரணம் ஐஎஸ்ஸுக்கு எதிரான கடுமையான அடியாகும், ஆனால் அது முழுமையானதல்ல. பயங்கரவாத அமைப்பு திட்டவட்டமாக தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கான சர்வதேச கூட்டணியில் உள்ள எங்கள் நட்பு நாடுகளுடன் போராட்டம் தொடரும். அதற்கு நாங்கள் முன்னுரிமை அளிப்போம்.

பிரிட்டன்: ‘இன்னும் முடியவில்லை’

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ட்விட்டர்:

"பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தில் பக்தாதியின் மரணம் ஒரு முக்கியமான தருணம், ஆனால் ஐஎஸ் தீவிரவாதக்குழுக்களின் தீமைக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை.

எனவே, மேலும் தொடரக்கூடிய ஐஎஸ் தீவிரவாதக்குழுக்களின் கொலைகார, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம். எங்கள் கூட்டணி நாடுகளுடன் இப்பணியில் இணைந்து செயல்படுவோம்."

இஸ்ரேல்: ‘முக்கியமான மைல்கல்’

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை:

இது பயங்கரவாத சக்திகள், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாத நாடுகளுக்கு எதிராக போராட அமெரிக்கா தலைமையில் சுதந்திரமாக இயங்கிவரும் நாடுகளின் ஒன்றுபட்ட முடிவை பிரதிபலிக்கிறது.

இது ஒரு முக்கியமான மைல்கல், ஆனால் இது நாம் வெல்ல வேண்டிய நீண்ட போரின் ஒரு பகுதியாகும்."

குர்துகள்: ஸ்லீப்பர் செல்கள் பழிவாங்கத் துடிப்பார்கள்

ஐ.எஸ்-க்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கத் தலைமையிலான கூட்டணியின் முக்கிய கூட்டாளியாக இருந்த சிரிய குர்திஷ் படையின் உயர்மட்ட தளபதி மஸ்லூம் அப்தி :

ஸ்லீப்பர் செல்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பக்தாதியின் மரணத்திற்கு பழிவாங்கத் துடிப்பார்கள்.

நேட்டோ: ‘முக்கியமானது’

நேட்டோ படைத் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தனது ட்விட்டர்:

சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க படி. நம் அனைவருக்கும் பொது எதிரியாக உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போராட்டத்தில் # நேட்டோ உறுதியாக உள்ளது.

ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x