சிரியாவில் மீண்டும் பிரச்சினை

சிரியாவில் மீண்டும் பிரச்சினை
Updated on
2 min read

கடந்த 8 ஆண்டுகளாக சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுக் கலவரத்தால் சிந்திய ரத்தம் போதாதென்று ரத்த ஆறு ஓடும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய முடிவை எடுத்திருக்கிறார். குர்து இனத்தவருக்கு பாதுகாப்பாக சிரியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்த அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் ட்ரம்ப். அவரின் இந்த முடிவால், குர்து மக்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. அமெரிக்க படைகள் வெளியேறிய அடுத்த நிமிடத்தில் இருந்து குர்து இனத்தவர் மீது துருக்கி படைகள் தாக்குதலை தீவிரப்படுத்திவிட்டன. இதையடுத்து, துருக்கி மீது பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக துருக்கி அதிபர் டைசெப் எர்டோகனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் குர்து இனத்தவரை நன்கு பயன்படுத்திக் கொண்ட ட்ரம்ப், இப்போது அவர்களை உதாசீனப்படுத்தியுள்ளார். இது அவர்களை மிகவும் கேவலப்படுத்துவதாக உள்ளது.

ட்ரம்பை அதிபர் பதவியில் இருந்து அகற்றுவது தொடர்பான விஷயத்தில் வேறுபட்டு இருக்கும் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும், சிரியாவில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவை ஒன்றுபட்டு கண்டித்திருக்கிறார்கள். பிரதிநிதிகள் சபையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக 354 பேரும், ஆதரவாக 60 பேரும் வாக்களித்திருக்கிறார்கள். அமெரிக்க படையை வாபஸ் பெறுவது மோசமான விளைவை ஏற்படுத்தும் என குடியரசுக் கட்சித் தலைவர்களே கூறியிருக்கின்றனர். அவர்களில் ஒருவர், கொலைகாரர்களுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் ஆதரவாக ட்ரம்ப் செயல்பட ஆரம்பித்து விட்டார் எனக் கூறியிருக்கிறார். செனட் சபையிலும் ட்ரம்புக்கு நெருக்கமான குடியரசுக் கட்சித் தலைவர்கள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகள் குறித்து வெளிப்படையாக விமர்சித்துள்ளனர். ஐஎஸ் தீவிரவாதிகள் மீண்டும் செயல்படத் தொடங்கினால் அதற்கு ட்ரம்ப் தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என செனட்டர் லிண்ட்சே கிரகாம் கூறியிருக்கிறார்.

குர்து இனத்தவரைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை என அமெரிக்க அதிபர் கூறியிருப்பது, இத்தனை நாள் நடந்த உள்நாட்டுக் கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட குர்து இனத்தவரின் கன்னத்தில் விழுந்த அறையாகும். குர்து இனத்தவரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் இருக்கும் 11 ஆயிரம் ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்தும் பெரும் அச்சம் எழுந்துள்ளது. இவர்களில் 50 தீவிரவாதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் கூட மிகப் பெரிய தாக்குதல்களை நடத்தும் அளவுக்கு அபாயகரமானவர்கள். அமெரிக்காவின் சொல் பேச்சுக்கு கட்டுப்பட்டு இத்தனை நாள் நடந்து கொண்ட குர்து இனத்தவரை கைவிட்டதோடு, அவர்களை துருக்கி அதிபர் எர்டோகனின் கோரத் தாக்குதல்களுக்கு இலக்காக மாற்றிவிட்டார் ட்ரம்ப்.

ஆனால், குர்து இனத்தவர் மனம் தளரவில்லை. எந்த சூழலிலும் தாக்குப்பிடித்து வாழும் அவர்களின் இயல்பை கைவிடவில்லை. மேலும் துருக்கி - சிரியா எல்லையை ரஷ்ய படையினருடன் சேர்ந்து சிரியா ராணுவமும் காவல் காத்து வருகிறது. வட சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை விலக்கிக் கொள்வதன் மூலம், ரஷ்யாவும் சிரியாவும் அதன் நெருங்கிய நாடான ஈரானும் இந்தப் பகுதியில் கோலோச்ச ஏற்பாடு செய்துவிட்டார் ட்ரம்ப். சிரியாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளை படையெடுப்பு மூலம் துருக்கியுடன் இணைக்க துருக்கி அதிபர் எர்டோகன் ஆசைப்படலாம். ஆனால் அது அத்தனை எளிதான காரியமல்ல. சில ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே துருக்கி மீது ராணுவ ரீதியான தடைகளை விதித்துள்ளன. இதனால் தொடர்ந்து ராணுவ நடவடிக்கையில் துருக்கி ஈடுபட முடியாது. ஐரோப்பிய நாடுகளை பழி வாங்கும் நோக்கில், துருக்கி மக்கள் அங்கிருந்து வெளியேறி அமெரிக்க நாடுகளுக்கு பெருமளவில் தஞ்சம் தேடி ஓடும்படி செய்ய எர்டோகன் நினைத்தால், அதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்.

ஐஎஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் சிரியாவில் இருந்து ட்ரம்ப் படைகளை விலக்கிக் கொண்டதற்கான உண்மையான காரணம் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அவரின் இந்த முடிவால் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தீவிரவாதம் மட்டுமல்லாது பல வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் ட்ரம்ப்பின் முடிவு குறித்து அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். முக்கியமாக, குர்து இனத்தவரை கைவிட்டதும் அவர்களை துருக்கியின் தாக்குதலுக்கு இலக்காக மாற்றியதும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் நம்பகத்தன்மை குறித்து பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இப்படியெல்லாம் நம்பிக்கை துரோகம் செய்தால் எந்த அளவுக்கு அமெரிக்காவை நம்பலாம் என அமெரிக்காவின் தோழமை நாடுகளும் புதிதாக கூட்டணி சேர விரும்பும் நாடுகளும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in