Published : 05 Jul 2015 12:06 PM
Last Updated : 05 Jul 2015 12:06 PM

இலங்கையில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை: அதிபர் சிறிசேனா உறுதி

இலங்கையில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று அந்த நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நான் அரசியலில் திடீரென்று நுழையவில்லை. எனக்கு 49 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ளது. கடந்த ஜனவரி 8-ம் தேதி (அதிபர் தேர்தல்) நடைபெற்ற அமைதிப் புரட்சிக்கு பாதிப்பு ஏற்படவிட மாட்டேன். அந்த புரட்சியை பாதுகாப்பேன்.

நாட்டில் அனைவருக்கும் நீதி கிடைக்க போராடுவேன். ஊழல், அராஜகம், குடும்ப ஆட்சி இல்லாத நல்லாட்சியை வழங்குவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இலங்கையில் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் வேட்பாளராக களம் இறங்குவதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

அவர் பிரதமர் வேட்பாளராக போட்டியிட ஆளும் லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒப்புதல் வழங்கியிருப்பதாக கூட்டணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த நேற்றுமுன்தினம் அறிவித்தார்.

ஆனால் இந்த அறிவிப்பு குறித்து லங்கா சுதந்திரக்கட்சி யின் தலைவரும் அதிபருமான மைத்ரிபால சிறிசேனா" மவுனம் காத்து வந்தார். இந்நிலையில் குடும்ப ஆட்சியை அனுமதிக்க மாட்டேன் என்று அவர் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. குழப்பமான அரசியல் சூழ்நிலையில் ராஜபக்ச எந்த கட்சி, கூட்டணி சார்பில் போட்டியிடுவார் என்பதில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x