

ஆறு வருடங்கள் ஆங் சான் சூச்சியை வீட்டுக் காவலில் வைத்த பிறகு அரசு அவரை விடுவித்தது. என்றாலும் பர்மா முழுவதும் அவர் பயணம் செய்ய முடியாமல் பலவித தடங்கல்களை ஏற்படுத்தியது. எனவே தன் வீட்டின் கதவுக்குப் பின்னால் இருக்கிற மேடையில் ஏறி ஒவ்வொறு ஞாயிற்றுக்கிழமையும் ஆங் சான் சூச்சி பேச, சாலையில் இருந்த வண்ணம் அதைக் கேட்டு உத்வேகம் பெறத் தொடங்கினார்கள் மக்கள். (எழுபது வயதான ஆங் சான் சூச்சி ‘ஜனநாயகம், அடிப்படை உரிமைகள்’ ஆகிய தலைப்புகளில் பேசினால் இன்றளவும் சாலைப் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் கூடிக் கேட்கிறார்கள்).
ஆங் சான் சூச்சியின் அகிம்சை வழிப் போராட்டத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்தது. 1991-ல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது உலக நாடுகளின் கவனம் பர்மாவின்மீது அழுத்தமாகவே விழத் தொடங்கியது. (இதற்கு அடுத்த வருடம் அவருக்கு சைமன் பொலிவர் பரிசு வழங்கப்பட்டது. 1993-ல் அவருக்கு ஜவஹர்லால் நேரு விருது அளிக்கப்பட்டது.
2008-ல் அமெரிக்க அரசு அவருக்கு ‘அமெரிக்க பாராளுமன்றத்தின் தங்கப் பதக்கத்தை’ வழங்கியது. அமெரிக்க சரித்திரத்திலேயே சிறையில் இருக்கும் ஒருவருக்கு இந்தப் பதக்கத்தை வழங்கியது இதுவே முதல் முறை).
நோபல் பரிசு பெற்ற பல்வேறு அறிஞர்கள் வேறொரு விஷயத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூட்டாக ஓர் அறிக்கையைத் தயார் செய்து பர்மாவின் ராணுவ அரசுக்கு அனுப்பினார்கள். அந்த அறிக்கையில் பல கோரிக்கைகள். அவற்றில் முக்கியமானவை ‘ஆங் சான் சூ கி விடுதலை செய்யப்பட வேண்டும். பர்மாவில் மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்’ ஆகியவைதான்.
ராணுவ அரசு நேரடியாக இந்த அறிக்கையைப் பெற ஒத்துக்கொள்ளவில்லை. எனவே இந்தக் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கைகளை தாய்லாந்து - மியான்மர் எல்லையில் நின்று கொண்டு அவர்கள் விநியோகிக்க, ராணுவ அரசு சிறிது சங்கடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆங் சான் சூச்சிக்கு அளிக்கப்பட்ட இடைஞ்சல்கள் கொஞ்சமல்ல. அவருக்கு எண்ணிலடங்காத இழப்புகள் ஏற்பட்டன. அவரது கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்தது ராணுவ ஆட்சி. அதைவிடக் கொடுமை சத்தம் போடாமல் பலரை ‘மறைய வைத்த’ கொடூரம்.
ஆங் சான் சூச்சியின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவரை கடும் காவலில் வைத்தது அரசு. அவர்மீது எந்தக் குற்றச்சாட்டுமே சுமத்தப்படவில்லை. இருந்தும் சிறைவாசம். ஆங் சான் சூச்சியின் அந்தரங்கப் பணியாளர் ஒருவர் திடீரென ‘மாயமாக மறைந்தார்’. அவரை பின்னர் சிறைச்சாலையில் பார்த்ததாக ஒரு தகவல் கசிந்தது.
ஆங் சான் சூச்சியின் ஆலோசகரான லீயோ நிகோலஸ் என்பவருக்கு மூன்ற வருட சிறை தண்டனையை அளித்தது அரசு. கூறப்பட்ட காரணம் - அவர் வைத்திருந்த ஃபாக்ஸ் கருவி ஒன்றுக்கு லைசன்ஸ் பெற்றிருக்காததுதான். விடுதலைக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருந்தபோது அவர் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரிய ஆங் சான் சூச்சியின் குரலுக்கு செவிசாய்க்க மறுத்தது ராணுவ அரசு.
வீட்டுச் சிறையில் இருந்த ஆங் சான் சூச்சிக்கு ‘கருணையுடன்’ ஒரு வாய்ப்பு அளித்தது ராணுவ அரசு. ‘’நீங்கள் நாட்டை விட்டு வெளியேற சம்மதித்தால் உங்களை விடுவித்து விடுகிறோம்’’ என்றது. சூச்சி மறுத்தார். ‘ராணுவ ஆட்சி மக்களாட்சி ஆக வேண்டும். அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப் பட வேண்டும்’ என்று பதிலுக்கு நிபந்தனைகளை விதித்தார். இவற்றை அரசு ஏற்கவில்லை.
1990-ல் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. சூச்சியின் ஆதரவைப் பெற்ற ஜனநாயக தேசியக் கழகம் பெரும்பாலான தொகுதிகளில் (80 சதவீதத்துக்கும் அதிகம்) வென்றது. ஆனால் இதை ஏற்க மறுத்து ராணுவ ஆட்சி தொடர்ந்தது.
இந்த நிலையில் ‘’1990 தேர்தலில் மக்கள் பெருவாரியாகத் தேர்ந்தெடுத்த எங்கள் கட்சிதான் அரசமைக்க வேண்டும். பர்மாவில் ராணுவ ஆட்சி மறைய வேண்டும்’’ என்று ஆங் சான் சூச்சி போராடினார்.
ஆங் சான் சூச்சியைத் தடுக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மியான்மரின் ஜனநாயகக் காற்றை ஒட்டுமொத்தமாக நிறுத்தி விடுவார்களோ?’ என்று பதைபதைப்பு அந்த நாட்டு மக்களுக்கு.தவிர, வேகமாக அதிகரித்து வரும் சீரழியும் (போதை வன்முறை) சிறுவர்களின் எண்ணிக்கையும் அவர்களைக் கவலை கொள்ள வைத்தது.
ஆனால், மியான்மரை ஆண்ட ஸ்லார்க் அமைப்பு, தன் அடக்குமுறையினாலேயே நாட்டை அமைதிப்படுத்திவிட முடியுமென்று நம்பியது. அதே சமயம் வெளிநாட்டு முதலீடுகளையும், நன்கொடைகளையும் வரவேற்கத் தொடங்கியது.
‘ஜனநாயகத்துக்கு எதிரான ஓர் அரசு வெளிநாட்டு உதவிகளைக் கேட்ப தென்பது சீனாவின் டெக்னிக். எனவே, ஸ்லார்க்கை வழிநடத்துவதில் சீனர் களுக்கும் பங்கு இருக்க வாய்ப்பு உண்டு’ என்று சில அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றார்கள்.
(உலகம் உருளும்)