

ஹாங்காங்
ஹாங்காங்கில் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக் குரிய குற்றவாளிகள் நாடு கடத்தல் மசோதா மக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங், கடந்த 1997-ம் ஆண்டு விடுதலை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, சீனாவின் சிறப்பு நிர்வாக மண்டலமாக இணைக் கப்பட்டது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள போதிலும், தன்னாட்சி பொருந்திய பிராந்தியமாகவே விளங்கி வருகிறது.
இந்நிலையில், கிரிமினல் குற்றவாளிகளை சீனாவுக்கும் தைவானுக்கும் நாடு கடத்தி விசாரிக்க ஏதுவாக ஒரு சட்டத்திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்த சீனா மேற்கொள்ளும் மறைமுக முயற்சி இது எனக் கூறியும், இந்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ஹாங்காங் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. போலீஸாரின் அடக்குமுறைக்கு நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். ஆயிரக் கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து கொண்டே சென்றது. இதனால், போராட்டத்தை அடக்க முடியாமல் ஹாங்காங் நிர்வாகம் திக்குமுக்காடி வந்தது.
இந்த சூழலில், சர்ச்சைக்குரிய இந்த மசோதா முழுவதுமாக திரும்பப் பெறப்படு வதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லேம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
போராட்டத்துக்கு காரணமானவர் விடுதலை
ஹாங்காங் போராட்டத்துக்கு முக்கிய காரண கர்த்தாவாக கருதப்படும் கொலை குற்றம்சாட்டப்பட்டவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார். ஹாங்காங்கைச் சேர்ந்தவரான சான் டாங் காய் (20), கடந்த பிப்ரவரி மாதம் தனது காதலியுடன் தைவானுக்கு சுற்றுலா சென்றார்.
அப்போது, அவரது காதலியை அவர் கொலை செய்ததாக அவர் மீது தைவானில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், சான், ஹாங்காங்குக்கு தப்பிச் சென்றார். இதையடுத்து அவரை தைவானுக்கு நாடு கடத்தும் வகையிலேயே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தெரிந்தோ, தெரியாமலோ ஹாங்காங் போராட்டத்துக்கு காரணமான சான், நேற்று விடுதலை செய்யப்பட்டார்.