

அமெரிக்காவின் டெனிசீயில் நச்சு ரசாயனங்களை ஏற்றிச் சென்ற ரயில் திடீரென தடம் புரண்டதில் தீப்பிடித்தது. இதனால் பெரிய அளவில் அப்பகுதியில் மக்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
டெனிசீ மாகாணம் நாக்ஸ்வில் நகரத்துக்கு அருகே மேரிவில் பகுதியில் இந்த ரயில் தடம்புரண்டது. இதில் இருந்த அக்ரைலோநைட்ரேட் என்ற எரியக்கூடிய நச்சு ரசாயனப் பொருள் மூச்சுத் திணறல் ஏற்படுத்தக் கூடியது. தடம் புரண்டதில் தீப்பிடித்ததால் இதன் தாக்கம் அபகுதியிலிருந்து பலரை வெளியேற்ற வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து 5,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்புப் படையினர் வீடுவீடாகச் சென்று மக்களை மீட்டு வருகின்றனர்.
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்யாததற்கே அக்ரைலோநைட்ரேட் என்ற அந்த நச்சு ரசாயனத்தின் தன்மையே காரணம் என்று தெரிகிறது.
இந்த ரயில் பெட்ரோலியம், மற்றும் எரிவாயு ஆகிய கண்டெய்னர்களையும் ஏற்றிசென்றதால் தீயின் தாக்கம் பெருமளவு ஏற்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தினால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட உள்ளூர்வாசிகள் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.