

ஹாங்காங்கில் ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை நடப்பதாக சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறும்போது, ''ஹாங்காங்கில் ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை அரங்கேறி வருகிறது. அங்கு நடந்து வருவது அமைதியான போராட்டம் இல்லை. போராட்டக்காரர்கள் போலீஸாரைத் தாக்குகின்றனர். இது எந்த நாட்டவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதில் வெளிநாட்டுப் படைகளும், சர்வதேச ஊடகங்களும் அரசியல் நெருக்கடியைத் தூண்டுகின்றன’’ என்றார்.
ஹாங்காங்கில் 20 வாரங்களுக்கு மேலாக அரசை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸாருக்கு இடையே நடந்த மோதலில் வன்முறை வெடித்தது.
ஹாங்காங் போராட்டப் பின்னணி
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹாங்காங். சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.
இந்நிலையில், ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவை கடந்த ஜூன் மாதம் ஹாங்காங் கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கைதும் செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த மசோதாவைத் திரும்பப் பெறுவதாக ஹாங்காங் அரசு அறிவித்தது. எனினும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஹாங்காங் போராட்டக்காரர்கள் அவர்களது பிற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.