

சிரியாவை விட்டு வெளியேறிய அமெரிக்கப் படைகள் மீது அழுகிய பழங்களை வீசி தங்களது எதிர்ப்பை குர்து மக்கள் வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து ஐஏஎன்எஸ் வெளியிட்ட செய்தியில், ''அமெரிக்க அதிபர் உத்தரவைத் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து திங்கட்கிழமை ஈராக் சென்ற 500 அமெரிக்கப் படை வீரர்கள் மற்றும் அவர்கள் வாகனங்கள் மீது குர்து இன மக்கள் அழுகிய பழங்களை வீசினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஏஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக, பாதுகாப்புக்காக 1000 அமெரிக்கப் படையினர் மேற்கு ஈராக் அனுப்பப்படுவார்கள் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து தனது படைகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார்.
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக குர்துகளின் போருக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. ஆனால் துருக்கியின் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெற்றது குர்து படைகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.