

துருக்கி -குர்து படைகள் இடையே போர் நிறுத்தம் அறிவித்திருக்கும் நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன் ரஷ்ய அதிபர் புதினைச் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பு ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
சிரியாவின் வடக்குப் பகுதியில் நிலைமையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது தொடர்பாக எர்டோகனும், புதினும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு தலைவர்களின் இச்சந்திப்பு குறித்து கூடுதல் தகவல் ஏதும் இரு நாடுகள் தரப்பில் இதுவரை வெளியாகவில்லை.
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு துருக்கி சம்மதம் தெரிவித்தது.