Published : 21 Oct 2019 12:45 PM
Last Updated : 21 Oct 2019 12:45 PM

ஃபேஸ்புக்கில் அவதூறான பதிவு: வங்கதேசத்தில் திடீர் கலவரம்; 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

டாக்கா

ஃபேஸ்புக்கில் முகமது நபி குறித்து அவதூறான தகவல்கள் பதிவு செய்ததால் கைது செய்யப்பட்ட நபர் மீது விசாரணை கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். 47 பேர் காயமடைந்ததாக எஃபே செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

வங்க தேசத்தைச் சேர்ந்த இந்து நபர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை சமூக வலைதளத்தில் முகமது நபி குறித்து அவதூறான கருத்துக்களைப் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். எனினும் அவர் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலாவின் காவல் ஆய்வாளர் சலாவுதீன் மியா கூறியதாவது:

''முகமது நபி குறித்து தவறான கருத்துப் பதிவிட்டவரை உடனே விசாரிக்கக் கோரி வங்கதேசத்தின் போலா மாவட்டத்தில், நேற்று காலை 11 மணியளவில் நூற்றுக்கணக்கான உள்ளூர் முஸ்லிம்கள் ஒரு பகுதியில் திரண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை போலீஸார் கலைக்க முயன்றபோது கலவரம் வெடித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் எடுத்து வைக்கப்படுவதாகவும், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் போராட்டக்காரர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை, ஆர்ப்பாட்டத்தை தடுக்க முயன்ற போலீஸார் மீது கற்களை வீசினர். தற்காப்புக்காக போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ஆனால் கும்பலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் அவரது முன்னிலையில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நான்கு பேர் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்''.

இவ்வாறு காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.

காயமடைந்த 47 பேர் மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலா மாவட்ட மருத்துவ அலுவலர் ரதிந்திரநாத் ராய் தெரிவித்தார்.

வங்கதேச எல்லைக் காவலர் செய்தித் தொடர்பாளர் ஷரிஃபுல் இஸ்லாம் கூறுகையில், ''நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஒரு படைப்பிரிவை ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளோம். மற்ற மூன்று படைப்பிரிவுகள் சாலை வழியாக அவர்களுடன் இணைகின்றன'' என்றார்.

வங்கதேசத்தில் 160 மில்லியனில் 90 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் உள்ளனர். அங்கு குறுங்குழுவாத வன்முறை என்பது அடிக்கடி நிகழாத ஒன்று அல்ல.

2016லும் இதேபோன்று ஒரு கலவரச் சம்பவம் நடைபெற்றது. பேஸ்புக்கில் புகைப்படத் தொகுப்பு வெளியிடப்பட்டதால் பிரம்மன்பரியா மாவட்டத்தில் 2016 அக்டோபர் இறுதியில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. காட்டுத்தீ போல் பரவிய படங்கள், மக்காவில் காபாவில் இருப்பது இந்துக் கடவுளான சிவன்தான் என்று அதில் காட்டப்பட்டிருந்தது. இந்த சர்ச்சை வெடித்ததில் இருந்து, இந்துக்களுக்கு சொந்தமான சுமார் 200 கோயில்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வங்கதேசம் முழுவதும் அழிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x