Published : 21 Oct 2019 11:58 AM
Last Updated : 21 Oct 2019 11:58 AM

எந்த தீவிரவாத முகாமையும் இந்திய ராணுவம் அழிக்கவில்லை: பாகிஸ்தான் மறுப்பு 

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள எந்த தீவிரவாத முகாமையும் இந்திய ராணுவம் அழிக்கவில்லை. இந்திய ராணுவம் கூறுவது பொய்யானது என்று பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள தாங்தர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சனிக்கிழமை இரவிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரும், உள்ளூர் வாசி ஒருவரும் கொல்லப்பட்டனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது.

இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியதையடுத்து, இந்திய ராணுவமும் பீரங்கி மூலமும், சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்கள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்த 3 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தினர் 10 பேர் கொல்லப்பட்டார்கள். ஜெய்ஷ் இமுகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் நேற்று தெரிவித்தார்

ஆனால் இந்திய ராணுவத்தின் கூற்றுக்கு பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவ்வாறு எந்த தீவிரவாத முகாமையும் இந்திய ராணுவம் அழிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறுகையில், "இந்திய ராணுவத் தளபதி ராவத்தின் கூற்று வேதனையளிக்கிறது. மிகவும் பொறுப்புள்ள பதவியில் ராவத் இருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 3 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், அங்கு எந்தவிதமான தீவிரவாத முகாமும் இல்லை.

பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் ஊடகத்தை அழைத்து வரட்டும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் ஏதும் இல்லை என்பதை நிரூபிக்கிறோம்.

புல்வாமா தாக்குதலுக்குப் பின் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, இந்தப் பகுதியில் அமைதியைக் குலைத்துவிட்டார்கள்.

உள்நாட்டில் சில நலன்களுக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் இதுபோன்ற பொய்யான தகவல்களை இந்திய ராணுவம் கூறுகிறது. இது ராணுவத்தின் தொழில்முறைக்கே எதிரானது" என ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x