சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் நம்பிக்கை
Updated on
1 min read

அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நவம்பர் மாதம் கையெழுத்தாகும் என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது ஏற்படும் என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “ஆசிய - பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு சிலியில் வருகின்ற நவம்பர் 16 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்றார்.

டொனால்ட் ட்ரம்ப் 2016-ல் தனது பரப்புரையின்போதே சீனாவின் வணிகக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடினார். 2017-ல் சீனா அறிவுசார் சொத்துரிமையை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டின்பேரில், ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார்.

சீன நிறுவனங்கள், அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிக நிறுவனங்களின் தயாரிப்புகளைப் போலி செய்கின்றன. உரிமம் இன்றி அமெரிக்க மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. வணிக ரகசியங்களைக் கையாடுகின்றன போன்ற குற்றச்சாட்டுகளை ஆணையம் முன்வைத்தது. மேலும், சீனா கணிசமான பொருட்களைக் குறைந்த விலையில் அமெரிக்கச் சந்தையில் விற்கிறது. இதனால், அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

சீனப் பொருட்களுக்கு கடுமையான வரிகளை விதித்து வந்தார் ட்ரம்ப். இதற்கு சீனாவும் பதிலடி அளித்தது. இதன் காரணமாக சீனா - அமெரிக்கா இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் ஒப்பந்தம் மூலம் தீர்வு காணும் முயற்சியில் இறங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in