

சிரியாவில் துருக்கி போர் குற்றங்களை புரிந்துள்ளதாக சர்வதேச தன்னார்வ அமைப்பான ஆம்னெஸ்டி குற்றஞ்சாட்டியுள்ளது.
சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படைகளுக்கு எதிராக, துருக்கி கடந்த ஒருவாரமாக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. துருக்கி தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், சிரியாவின் வடக்குப் பகுதியில் போர் நிறுத்தம் தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வடக்கு சிரியாவில் 5 நாள் போர் நிறுத்தத்திற்கு துருக்கி அதிபர் எர்டோகன் சம்மதம் தெரிவித்தார்.
இந்த நிலையில் சிரியாவில் துருக்கி படைகள் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக சர்வதேச தன்னார்வ அமைப்பான ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆம்னென்ஸ்டி வெள்ளிக்கிழமை கூறியதாவது, “ துருக்கி பாதுகாப்புப் படையினர் வடக்கு சிரியாவில் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்ட விரோதமான தாக்குதலையும் அவர்கள் நடத்தியுள்ளனர். பொதுமக்கள் வீடுகள் இருக்கும் பகுதிகள், மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
குர்து படையினருக்கு எதிராக துருக்கி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 72 பேர் பலியானதாக சிரிய போர் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டு குறித்து துருக்கி தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.