அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 311 இந்தியர்கள்: தாயகம் அனுப்புகிறது மெக்சிகோ

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 311 இந்தியர்களை, சிறப்பு விமானம் மூலம் தாயகம் அனுப்புகிறது மெக்சிகோ அரசு.

மெக்சிகோவில் இருந்து ஸ்பெயினின் மாட்ரிட் வழியாக வரும் இந்த ஏர்பஸ் விமானம், வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லி வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெக்சிகோ குடியேற்றப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "310 இந்தியர்கள் சட்டவிரோதமாக மெக்சிகோவுக்குள் வந்து, அங்கிருந்து சர்வதேச ஏஜெண்டுகள் மூலம், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்குத் திட்டமிட்டிருந்தார்கள்.

இந்தியர்கள் 311 பேரும் இரு தனியார் விமானங்கள் மூலம் மெக்சிகோவுக்கு வந்துள்ளார்கள். அங்கிருந்து சர்வதேச ஏஜெண்டுகள் மூலம் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வழங்கி அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைய திட்டமிட்டிருந்தார்கள். ஆக்சாகா, பாஜா கலிபோர்னியா, வெராகுருஸ், சிபாஸ், சோனோரா, மெக்சிகோ சிட்டி, துராங்கோ, டபாஸ்கோ ஆகிய நகரங்களில் இந்தியர்கள் தங்கி இருந்தார்கள்.

மெக்சிகோவில் தங்குமிடம், விமானச் செலவு, உணவு அனைத்தும் அடங்கும். இவர்கள் மெக்சிகோவில் ஒருமாதம் வரை தங்கி இருக்க வேண்டும். அதற்குள் சர்வதேச ஏஜெண்டுகள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

மெக்சிகோவில் தங்கி இருந்த இந்தியர்கள் அனைவரும் போயிங் 747-400 எண் கொண்ட விமானம் மூலம் ஸ்பெயின் மாட்ரிட் வழியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இந்தியர்கள் அனைவருக்கும் அவரசரக்காலச் சான்றிதழ் மட்டும் அளிக்கப்பட்டு, அவர்கள் இந்தியாவில் மட்டும் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. போதுமான ஆவணங்கள், பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்கு மட்டும் இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து 'தி வாஷிங்டன் போஸ்ட்' நாளேடு வெளியிட்ட செய்தியில், "சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய, மெக்சிகோவில் தங்கியிருந்த 311 இந்தியர்கள் தாயகம் அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் மெக்சிகோவில் டோல்கா நகரில் இருந்து டெல்லிக்கு தனி விமானம் மூலம் 60 பாதுகாவலர்களுடன் புறப்படுகிறார்கள்.

அமெரிக்க அரசின் கடும் நெருக்கடி காரணமாக மெக்சிகோ குடியேற்றத்துறை கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. அகதிகள் சட்டவிரோதமாக வரும் வழிகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டு பல்வேறு சோதனைகளைக் கடந்துதான் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவுக்கு அனுப்பப்பட இருக்கும் இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in