Published : 17 Oct 2019 04:44 PM
Last Updated : 17 Oct 2019 04:44 PM

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது: போரிஸ் ஜான்ஸன்

பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக நீண்ட காலமாக இழுபறி நீடித்து வந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் ‘பிரெக்ஸிட்’ மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற பல முறை ஓட்டெடுப்பு நடந்தது. ஆனால், இந்த ஓட்டெடுப்பில் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்ஸன் பிரதமராகப் பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தெரசா மேவுக்கு ஏற்பட்டது போல அதே சிக்கல் போரிஸ் ஜான்ஸனுக்கும் ஏற்பட்டது.

பிரெக்ஸிட்டை நிறைவேற்றக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆளும் கட்சியிலும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு இருந்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் துணிச்சலாக நாடாளுமன்றத்தை முடக்கினார். செப்டம்பர் 11-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை இங்கிலாந்து நாடாளுமன்றம் முடக்கப்பட்டது.

நாடாளுமன்ற முடக்க நடவடிக்கையை இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கருடன் நடத்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.

இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கூறும்போது, “ நமக்கு சிறந்த புதிய ஒப்பந்தம் கிடைத்துவிட்டது. நாடாளுமன்றத்திற்கு பிரெக்ஸிட் கிடைத்துவிட்டது” என்று தெரிவித்தார்.

புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக சனிக்கிழமை இங்கிலாந்து நாடாளுமன்றம் கூட இருப்பதாகவும் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்தார். இந்தப் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை “நியாயமான மற்றும் சீரான ஒப்பந்தம்” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x