

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸும் அவரது மனைவி கேத்ரினும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்வதற்காக இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸும் அவரது மனைவி கேத்ரினும் இந்த வாரம் இஸ்லாமாபாத் வந்தடைந்தனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்த பிறகு, தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) லாகூரில் உள்ள ஷவ்கட் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியை இருவரும் பார்வையிட்டனர்/ மேலும் பஞ்சாப் மாகாண முதல்வர் மற்றும் ஆளுநரையும் சந்திக்க உள்ளனர்.
இந்தப் பயணத்தில் இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத்ரின் பாகிஸ்தான் பெண்கள் அணியும் ஆடைகளை அணிந்திருந்தது அந்நாட்டு மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது.
முன்னதாக, மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா 1996, 1997-ம் ஆண்டுகளில் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு இளவரசர் சார்லஸும் அவரது மனைவி கமிலாவும் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.