

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தரப்பில், “பிலிப்பைன்ஸில் புதன்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் மையம் மாகிலாலா நகரிலிருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கப் பாதிப்புப் பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாக பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிங் ஆஃப் ஃபயர்
ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் 'ரிங் ஆஃப் ஃபயர்'-ன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கி உள்ளது.
இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.