

ரியாத்
சவுதி அரேபியாவில் மெதினா நகரில் இன்று பேருந்தும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 35 வெளிநாட்டுப் பயணிகள் பரிதாபமாக பலியானார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்து ஏற்பட்டவுடன் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால், அதில் இருந்த பயணிகளால் வெளியேற முடியவில்லை. சிலர் மட்டுமே காயத்துடன் தப்பியதால் இந்த மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
புனித நகரான மெதினாவில் இருந்து தனியார் பேருந்து ஒன்று அரபு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று புறப்பட்டது. இந்தப் பேருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ள அல் அகால் எனும் கிராமம் அருகே, ஹிஜ்ரா சாலையில் வந்தபோது, எதிரே வந்த கனரக வாகனமும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
மோதிய வேகத்தில் பேருந்து தீப்பிடித்ததால், ஏராளமான பயணிகள் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் உயிரிழந்தனர். சிலர் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார்கள். காயமடைந்த 4 பயணிகள் மெதினாவில் உள்ள அல்-ஹம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என சவுதி ஊடக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தைச் சேர்ந்த பயணிகள் பேருந்து, எரிபொருள் டேங்கர் மீது விபத்துக்குள்ளானதில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் மெக்கா அருகே நடந்த சாலை விபத்தில் 6 இங்கிலாந்து பயணிகள் பலியானார்கள்.
பிரதமர் மோடி இரங்கல்
சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் 35 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "சவுதி அரேபியாவின் மெக்கா அருகே பேருந்து விபத்துக்குள்ளானது குறித்து வேதனை அடைந்தேன். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.