

அடுத்த இரு வாரங்களில் சிரியாவில் 1000 அமெரிக்க ராணுவ வீரர்களை அமெரிக்கா வாபஸ் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வடக்கு சிரியாவில் தனது படைகளை வாபஸ் பெற்றது அமெரிக்கா. சிரியாவில் துருக்கிப் படையினரும் ஆறாவது தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் சிரியாவில் உள்ள 1000 வீரர்களை அடுத்த இரு வாரத்துக்குள் அமெரிக்கா வாபஸ் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மறுபுறம் சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் துருக்கிக்கு எதிராக பல்வேறு வர்த்தக தடைகளை விதித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் சிரியாவில் அமெரிக்க படையினரை வாபஸ் பெற்றது அமெரிக்காவின் நம்பக தன்மையை பாதிக்கும் என்று ட்ரம்பின் முடிவை எதிர்கட்சிகள் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.