பாகிஸ்தானுக்கு இறுதி எச்சரிக்கை; 'டார்க் க்ரே' பட்டியலில் சேர்க்கப்படுகிறது? தீவிரவாத நிதித் தடுப்பு கடைசி வாய்ப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் : கோப்புப்படம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் : கோப்புப்படம்
Updated on
2 min read

பாரிஸ்

தீவிரவாத நிதித் தடுப்பு அமைப்பான எப்ஏடிஎப் அமைப்பின் கடும் நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தான் இறுதி எச்சரிக்கையாக 'டார்க் க்ரே' பட்டியலில் சேர்க்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதிகளுக்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுக்காதிருத்தல், நிதியுதவியைத் தடுக்க ஆர்வம் காட்டாமை, முகாம்களை அழிப்பதில் மெத்தனம் காட்டுதல் ஆகியவற்றால் பாகிஸ்தான் தற்போது 'க்ரே' பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி எச்சரிக்கை விடுக்கும் வகையில் தீவிரவாத நிதித் தடுப்பு அமைப்பான எப்ஏடிஎப் அமைப்பு பாகிஸ்தான் தன்னை திருத்திக் கொள்ளும் வகையில்' டார்க் க்ரே' பட்டியலில் சேர்க்கும் எனத் தெரிகிறது

தீவிரவாதிகளுக்கு நிதியுதவியைத் தடுக்கும் அமைப்பான நிதிச்செயல் பணிக்குழுவின் (எப்ஏடிஎப்) கூட்டம் பாரிஸ் நகரில் நேற்று தொடங்கியது. இக்கூட்டம் 18-ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளார்கள்.

இந்தக் கூட்டத்தில் கடந்த ஓராண்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அதாவது தீவிரவாதிகளை ஒழிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, தீவிரவாத முகாம்களை அழித்ததா, தீவிரவாதிகளைக் கைது செய்தல், நிதியுதவியைத் தடுத்தல், அடைக்கலம் கொடுக்காதிருத்தல் போன்ற நடவடிக்கைகளை மனநிறைவாக எடுத்துள்ளதா என ஆலோசிக்கப்படும். இவை மனநிறைவாக இல்லாமல் இருந்தாலும், பாகிஸ்தானை தற்போதுள்ள க்ரே பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை தொடங்கப்படும்.

ஆனால், பாரிஸில் இருந்து வரும் தகவல்களில், தீவிரவாதத் தடுப்பு அமைப்பு பாகிஸ்தானுக்கு நிர்ணயித்திருந்த 27 விதிமுறைகளில் வெறும் 6 விதிமுறைகளை மட்டுமே இதுவரை அந்தநாடு பின்பற்றியுள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், தீவிரவாத நிதித்தடுப்புக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு கடுமையான நெருக்கடியை உலக நாடுகள் அளித்து, ஒதுக்கிவைக்க முடிவு எடுக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், எப்ஏடிஎப் அமைப்பின் கடுமையான கண்டனத்துக்கும், எச்சரிக்கைக்கும் பாகிஸ்தான் ஆளாகும் அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ளது.

பாகிஸ்தான் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து வரும் 18-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போதுள்ள க்ரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டு, அடுத்த இடமான 'டார்க் க்ரே' பட்டியலுக்கு பாகிஸ்தான் நகர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு முன்னதாக இருக்கும் 'டார்க் க்ரே' பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. இது அந்த நாட்டுக்கு எப்ஏடிஎப் அமைப்பு வழங்கும் இறுதிக்கட்ட எச்சரிக்கையாகும்.
தீவிரவாதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு நிதியுதவியைத் தடுக்க நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்பதால், கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் க்ரே பட்டியலில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in