Published : 15 Oct 2019 12:03 PM
Last Updated : 15 Oct 2019 12:03 PM

மார்க்ரெட் அட்வுட், பெர்னார்டைன் எவாரிஸ்டோவுக்கு புக்கர் விருது: சல்மான் ருஷ்டிக்கு  இல்லை; விதிகளை உடைத்த நடுவர்கள்

லண்டன்

2019-ம் ஆண்டுக்கான புக்கர் விருது கனடா எழுத்தாளர் மார்க்ரெட் அட்வுட், இங்கிலாந்து எழுத்தாளர் பெர்னார்டைன் எவாரிஸ்டோ ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.

கடந்த 1969-ம் ஆண்டு புக்கர் விருது உருவாக்கப்பட்டபின் விருது பெறும் முதல் கறுப்பின பெண் எழுத்தாளர் எவாரிஸ்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக புக்கர் விருது ஒரு எழுத்தாளருக்கு மட்டுமே வழங்கப்படும். ஆனால், அந்த விதிமுறைகளை உடைத்த நடுவர்கள் புக்கர் பரிசை இரு எழுத்தாளர்களுக்கு வழங்கினார்கள். இதற்கு முன் கடந்த 1974, 1997 ஆகிய ஆண்டுகளில் புக்கர் விருதுக்கு இருவரை நடுவர்கள் தேர்வு செய்து பகிர்ந்தளித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புக்கர் விருதின் விதிமுறைப்படி விருதை கண்டிப்பாக பிரித்து வழங்குதல் கூடாது. ஆனால், விருது பெற்ற இரு எழுத்தாளர்களையும் நாங்கள் பிரித்துப் பார்க்க முடியாது என்று நடுவர்கள் விதிமுறைகளைத் தள்ளிவைத்து இருவருக்கும் விருதையும், பரிசுப் பணத்தையும் பிரித்துக் கொடுப்பதாக அறிவித்தனர்.

அதன்படி, 79 வயதான மார்க்ரெட் அட்வுட் எழுதிய 'தி டெஸ்டாமென்ட்',( The Testaments ) எவாரிஸ்டோ எழுதிய 'கேர்ள் உமென் அதர்' (Girl Woman Other ) ஆகிய நூல்கள் புக்கர் விருது பெற்றன

79 வயதான கனடா எழுத்தாளர் அட்வுட் கூறுகையில், " நான் இந்த புக்கர் விருதை இளம் எழுத்தாளர் ஒருவருடன் பகிர்ந்து பெற்றுக்கொள்வதை பெருமையாகக் கருதுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். எவாரிஸ்டோவுடன் சேர்ந்து இந்த விருதைப் பெறும்போது, எனக்கு அதிகமான வயதாகிவிட்டது என்று நான் நினைக்கவில்லை. நான் இங்கு தனியாக வந்து விருது பெற்றிருந்தால் எனக்கு சிறிது தர்மசங்கடமாக இருந்திருக்கும். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

புக்கர் விருது பெற்ற முதல் கறுப்பின பெண் எழுத்தாளர் எவாரிஸ்டோ கூறுகையில், " கறுப்பினப் பெண்களான எங்களைப் பற்றி நாங்கள் எழுதாவிட்டால், வேறு யார் எங்களைப் பற்றி எழுதுவார்கள். இந்த விருதை மார்க்ரெட்டுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகப்பெரிய எழுத்தாளர், ஜாம்பவான் மார்க்ரெட்" எனத் தெரிவித்தார்.

எவாரிஸ்டோவின் 'கேர்ள் உமென் அதர்' நூல் என்பது இங்கிலாந்தில் வசிக்கும் கறுப்பினக் குடும்பத்தைச் சேர்ந்த 12 பெண்கள் நாட்டைவிட்டு ஆப்பிரிக்கா, கரிபியன் தீவுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்லும் கதையாக அமைந்துள்ளது.

மேலும், விருதுக்கான இறுதிப் பட்டியலில் லூசி எல்மானின் 'டக்ஸ் ,நியூபரிபோர்ட்', சிகோஜி ஓபிமோவின் 'அன் ஆர்கெஸ்ட்ரா ஆப் மைனாரிட்டிஸ்', எலிப் ஷாபாக்கின் '10 மினிட்ஸ் 38 செகண்ட்ஸ் இன் திஸ் ஸ்ட்ரேஞ்ச் வேர்ல்ட்' ஆகிய நூல்கள் தேர்வு பெற்றன.

இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் 'குயிச்சோட்டி' என்ற நாவலும் விருதுகான இறுதிப்பட்டியலுக்குத் தேர்வானது. ஆனால், கடைசி நேரத்தில் அந்தப் புத்தகத்தை நடுவர்கள் நிராகரித்தனர். இதுவரை 5 முறை புக்கர் விருதுக்கு சல்மான் ருஷ்டியின் நூல்கள் சென்று தோல்வி அடைந்துள்ளன. கடந்த 1981-ம் ஆண்டு சல்மான் ருஷ்டி எழுதிய 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' எனும் நாவலுக்கு கடைசியாக புக்கர் விருது கிடைத்தது. அதன்பின் 5 முறை விருதுக்கான இறுதிப் பட்டியல்வரை சென்று தோல்வி அடைந்துள்ளது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x