

ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ, “ஜப்பானில் வரலாறு காணாத பாதிப்பை ஹபிகிஸ் புயல் விட்டுச் சென்றுள்ளது. இப்புயல் காரணமாக ஜப்பானின் கிழக்குப் பகுதியில் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்புயல் காரணமாக தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஹபிகிஸ் புயல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. 15 பேர் மாயமாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அதிகப்படியான உயிரிழப்புகள் ஜப்பானின் வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹபிகிஸ் புயல் காரணமாக நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புயல் பாதிப்பு குறித்து ஜப்பான் பிரதமர் ஹின்சே அபே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “ பாதிக்கப்பட்டவர்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
4.6 பில்லியன் டாலர் புயல் நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.