Published : 14 Oct 2019 01:52 PM
Last Updated : 14 Oct 2019 01:52 PM

மூன்றில் ஒன்று நிச்சயம்: கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுமா பாகிஸ்தான்? பாரிஸில் தீவிரவாத நிதித் தடுப்பு கூட்டத்தில் முடிவு

பாரிஸ்

தீவிரவாதிகளுக்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுத்தல், நிதி வசதிகளைத் தடுத்தல் போன்றவற்றில் பாகிஸ்தான் திருப்திகரமாகச் செயல்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்யும் தீவிரவாத நிதித் தடுப்பு அமைப்பான நிதிசெயல் பணிக் குழுவின் (எப்ஏடிஎப்) கூட்டம் பாரிஸிஸ் இன்று தொடங்குகிறது.

இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு மூன்று விஷயங்களில் ஒன்று நடப்பது நிச்சயம். தீவிரவாதிகளுக்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் தற்போது க்ரே (grey) லிஸ்ட் நாடுகள் வரிசையில் பாகிஸ்தான் இருக்கிறது. ஒருவேளை ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைள் மீது நம்பிக்கை ஏற்பட்டு அந்த நாட்டை பச்சை நிறப் பட்டியல் நாடுகளுக்கு மாற்றலாம்

தீவிரவாதிகளுக்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை, எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவாக இல்லை எனக் கருதி கறுப்புப் பட்டியலுக்கு மாற்றலாம். இறுதியாக தற்போதுள்ள க்ரே பட்டியலில் பாகிஸ்தான் தொடரலாம் . இந்த மூன்று நடவடிக்கையில் ஒன்றை பாகிஸ்தான் எதிர்கொள்ளும்.

தீவிரவாதிகளுக்கு நிதியுதவியை தடுக்கும் அமைப்பான நிதிச்செயல் பணிக்குழுவின் (எப்ஏடிஎப்) கூட்டம் பாரிஸ் நகரில் இன்று தொடங்கி வரும் 18-ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டின் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் ஹமாத் அசார் 2 நாட்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

கடந்த ஓராண்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுத்தல், தீவிரவாத முகாம்களை அழித்தல், தீவிரவாதிகளைக் கைது செய்தல், நிதியுதவியைத் தடுத்தல், அடைக்கலம் கொடுக்காதிருத்தல் போன்ற நடவடிக்கை திருப்திகரமாக இருந்தால், அந்நாட்டை தற்போதுள்ள க்ரே பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை தொடங்கப்படும்.

தீவிரவாதிகளுக்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று மற்ற நாடுகள் குற்றம் சாட்டி ஆதாரங்கள் அளிக்கும் பட்சத்தில் க்ரே பட்டியலி்ல இருந்து கறுப்புப் பட்டியலுக்கு மாற்றப்படும்.

ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தக் கூட்டத்தில் சீனா, மலேசியா, துருக்கி போன்ற நட்பு நாடுகள் ஆதரவாக இருப்பதால், கறுப்புப் பட்டியலுக்குள் அந்நாட்டை தள்ளவிடமாட்டார்கள். தொடர்ந்து க்ரே பட்டியலில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நடப்பாண்டு ஏப்ரல் மாதம் வரை பாகிஸ்தான் அரசு, தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதித்துக்கும் எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதத்துக்கும் எதிராக நிதித்தடுப்பு நடவடிக்கைகள் என்ன எடுக்கப்பட்டது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

எப்ஏடிஎப் அமைப்பின் 20 வகையான வழிமுறைகளை பாகிஸ்தான் பின்பற்றி நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் அப்துல் ஹபீஸ் ஷேக் தெரிவித்துள்ளார்.

தங்கள் மண்ணில் செயல்படும் பெரும்பாலான தீவிரவாத அமைப்புகளைத் தடைசெய்தும், தீவிரவாதிகளைக் கைது செய்தும் நடவடிக்கை எடுத்திருப்பதாக பாகிஸ்தான் தெரிவிக்கிறது. இதுதவிர தீவிரவாதிகளின் சொத்துகளை முடக்குதல், பறிமுதல் செய்தல், நிதியுதவியைத் தடுத்தல் போன்றவற்றிலும் ஈடுபடுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆசியா பசிபிக் மண்டலத்துக்கான தீவிரவாத நிதித் தடுப்பு நடவடிக்கை குறித்த அறிக்கை கடந்த வாரம் வெளியானது. இதில், எப்ஏடிஎப் அமைப்பின் வழிகாட்டுதல், அளவீடுகளில் 40-க்கு 26 விஷயங்களை மட்டும் பாகிஸ்தான் பின்பற்றுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு நிதியுதவியைத் தடுக்க நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்பதால், கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் க்ரே பட்டியலில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x