Published : 14 Oct 2019 01:42 PM
Last Updated : 14 Oct 2019 01:42 PM

சிரியாவில் துருக்கி தாக்குதலை நிறுத்த உடனடி நடவடிக்கை: உலக நாடுகளுக்கு பிரான்ஸ், ஜெர்மனி அழைப்பு

பாரிஸ்,

சிரியாவின் மீது நடத்தி வரும் துருக்கியின் ராணுவத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உலக நாடுகளுக்கு பிரான்ஸ், ஜெர்மனி அழைப்பு விடுத்துள்ளது.

"இந்தத் தாக்குதல் முடிவடைய வேண்டும் என்று எங்களுக்கு ஒரு பொதுவான விருப்பம் உள்ளது," என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்த பிறகு இந்த அறிவிப்பை இம்மானுவேல் மக்ரோன் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கப் படைகளை எல்லையிலிருந்து பின்வாங்குமாறு கட்டளையிட்டதை அடுத்து, கடந்த புதன்கிழமை துருக்கியின் ராணுவ ஊடுருவல் தொடங்கியது. 5-வது நாளாக இன்றும் துருக்கி ராணுவம் சிரியாவின் மக்கள் வாழிடங்களில் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இதானால் சுமார் 4 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குர்து படைகளை குறிவைத்து துருக்கி தாக்குதலை நடத்தினாலும் பிராந்தியத்தில் ஸ்திரத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. இதனால் துருக்கிக்கு இதுநாள் வரை ஆயுதம் வழங்கி வந்த நெதர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆயுதம் வழங்குவதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன.

பிரெஞ்சு நாட்டுத் தலைவர் நேற்று மாலை, வடகிழக்கு சிரியாவின் நிலைமை குறித்து விவாதிக்க அவசரகால பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியதாக பிரெஞ்சு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜெர்மன் அதிபருடனான சந்திப்புக்குப் பிறகு இம்மானுவேல் மக்ரோன் அமைச்சரவைக் கூட்டத்தில் கூறுகையில், '' துருக்கியின் தாக்குதல் அபாயங்களினால் சிரியாவில் தாங்கமுடியாத மனித அவலங்கள் ஏற்படும். மேலும் அங்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதம் மீண்டும் எழுச்சி பெறுவதற்கு இது சாதகமாக அமையும்.

சிரியாவில் துருக்கியின் ராணுவ நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக அடுத்த மணிநேரம், அடுத்த நாட்கள் என்ற வேகத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை வரையறுக்கவே ஜெர்மனியோடு பிரெஞ்சு ஒருங்கிணைந்துள்ளது. இந்தத் தாக்குதல் முடிவடைய வேண்டும் என்று இரு நாடுகளுக்கும் ஒரு பொதுவான விருப்பம் உள்ளது. இதில் மற்ற நாடுகளும் இணைந்துகொள்ளலாம்’’ என்று தெரிவித்தார்.

துருக்கி அதிபருடன் ஜெர்மனி அதிபர் பேச்சு

ஜெர்மனி அதிபர் மெர்கல், நேற்று துருக்கி அதிபர் எர்டோகனுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, வடக்கு சிரியாவில் துருக்கியின் ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

துருக்கியின் நியாயமான பாதுகாப்பு நலன்களைப் பொருட்படுத்தாமல் உள்நாட்டு மக்களின் பெரும்பகுதியினர் இடம்பெயர இந்தத் தாக்குதல் அச்சுறுத்துகிறது என்றும் இந்தத் தாக்குதல் பிராந்தியத்தை சீர்குலைப்பதோடு இப்பகுதியில் மீண்டும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதம் தலைதூக்க வழிவகுக்கும் என்றும் மெர்கல், எர்டோகனிடம் கூறினார்.

எர்டோகனின் வேண்டுகோளின் பேரில் இந்த தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் ஜெர்மன் அரசாங்க செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு சிரியாவில் அங்காராவின் தாக்குதலைத் தொடர்ந்து துருக்கிக்கு ஆயுத ஏற்றுமதி நிறுத்தப்படுவதாக பிரான்ஸ் சனிக்கிழமை அறிவித்தது. "துருக்கியின் தாக்குதலுக்குப் பயன்படுத்தக்கூடிய எந்தவொரு போர் தொடர்பான பொருட்களையும் துருக்கிக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்த பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என்று பிரெஞ்சு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x