

ஜெனீவா,
வடகிழக்கு சிரியாவில் குர்து படையினர் மீது துருக்கி கொடூரமான தாக்குதல் நடத்திவருவதால் கடந்த மூன்று நாட்களில் 130,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டுள்ளது என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க துருப்புக்களை எல்லையிலிருந்து பின்வாங்குமாறு கட்டளையிட்டதை அடுத்து, கடந்த புதன்கிழமை துருக்கியின் ராணுவ ஊடுருவல் தொடங்கியது. இதனால் சுமார் 100,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஐ.நா. வெள்ளிக்கிழமை கூறியிருந்தது.
சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது துருக்கி நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது 130,000 மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்தித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் வேகமாக அதிகரிக்கும் என்று ஐ.நா. ஐ.நா.வின் மனிதாபிமான நிறுவனமான OCHAவின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லர்கே அச்சம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லர்கே ஏஎப்பியிடம் கூறியதாவது:
''பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதிலுமிருந்து கடந்த மூன்று நாட்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேறினர். இன்று மேலும் வெளியேறி வருகின்றனர். இதேநிலை தொடர்ந்து உள்ளதால் 4 லட்சம் பேர் இடம்பெயரக்கூடிய ஒரு மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மக்களுக்கு உடனடியாக பாதுகாப்பும் உதவியும் தேவைப்படுகிறது.
இன்றுள்ள சூழ்நிலையில் டெல் அபியாட் மற்றும் ராஸ் அல்-ஐனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் தற்போது வெளியேறியுள்ள மக்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையும் துல்லியமானதில்லை. அதைவிட அதிகமாக இருக்கவே வாய்ப்புள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சமூக மற்றும் உறவினர்களின்வீடுதேடி அலைகின்றனர். பெரும்பாலோனோர் பள்ளிகளிளும் கூட்டு முகாம்களிலும் சென்று தஞ்சமடைந்து வருகின்றனர். துருக்கியின் தாக்குதல் இப்படியே தொடர்ந்தால் பிரதேசத்தின் கட்டுப்பாட்டில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம்.
பல்வேறு (இடப்பெயர்ச்சி) முகாம்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து தீவிரமான கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.
துருக்கிப் படையினர் எல்லையில் பல முனைகளில் ராணுவத் தாக்குதலுக்கு இன்னும் ஏராளமான மனித இழப்புகள் ஏற்படும்.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை ஒப்பிடும்போது அவர்களுக்கு சேவையாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஐ.நா மற்றும் இப்பகுதியில் செயல்படும் பிற சர்வதேச உதவி அமைப்புகள் 113 உள்ளன. இந்த அமைப்புகளில் சார்பாக ஏற்கெனவே 384 பேர் இருந்தனர். தற்போது 200 ஆக குறைந்துள்ளது. இவர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலைகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லர்கே தெரிவித்துள்ளார்.
- ஏ.எஃப்.பி