

வாடிகன் சிட்டி
வாடிகன் சிட்டியில் இன்று நடந்த விழாவில் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் த்ரேசியாவை புனிதராக போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் அறிவித்தார்.
மரியம் த்ரேசியாவோடு சேர்த்து 4 கன்னியாஸ்திரிகளும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். இங்கிலாந்தைச் சேர்ந்த கார்டினர் ஜான் ஹென்றி நியூமேன், ஸ்வி்ட்சர்லாந்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி மார்க்ரெட் பேஸ், பிரேசில் கன்னியாஸ்திரி டுல்சி லோப்ஸ், இத்தாலியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஜியுசிபினா வன்னினி ஆகியோரும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கடந்த 1914-ம் ஆண்டு திருச்சூரில் உள்ள புத்தன்சிராவில் கன்னியாஸ்திரியாக வாழ்க்கையைத் தொடங்கிய த்ரேசியா நூறாண்டுகளில் புனிதாராக உயர்த்தப்பட்டுள்ளார். வாடிகன் சிட்டியில் நடந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற்ற, வழிபாடு நடத்தினார்கள். இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. முரளீதரண் பங்கேற்றார்.
கத்தோலிக்க திருச்சபையில் ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்க அவரது மரணத்துக்குப் பிறகு 2 அதிசயங்களை நிகழ்த்தியிருக்க வேண்டும். அதன்படி இருவரின் நோய் தீர்த்து மரியம் திரேசியா அதிசயம் நிகழ்த்தினார். இதனை போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த புனிதமான நிகழ்வு மூலம் கேரளாவில் உள்ள நூற்றாண்டுகள் மரபு கொண்ட சிரியோ-மலபார் தேவாலயத்தில் புனிதராக உயரும் 4-வது கன்னியாஸ்திரி த்ரேசியா என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன், கடந்த 2008 கன்னியாஸ்திரி அல்போன்ஸா, ஃபாதர் குரியகோஸ் என்ற சாவரா அச்சன், கன்னியாஸ்திரி எபுராசியா என்ற எபுராசியம்மா ஆகியோர் 2014-ம் ஆண்டு புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டம், புத்தென்சிராவை சேர்ந்தவர் மரியம் திரேசியா. கடந்த 1876 ஏப்ரல் 26-ம் தேதி பிறந்தார். சிறுவயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டிய அவர் கடந்த 1914-ம் ஆண்டில் புத்தன்சிராவில் கன்னியாஸ்திரியாக வாழ்க் கையைத் தொடங்கினார்.
மதம் சார்ந்த பணிகள் மட்டு மன்றி சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டினார். கேரளாவில் பெண் கல்விக்காக அதிகம் பாடுபட்டார். 2 பள்ளிகள், 3 கான்வென்ட்டுகள், ஓர் ஆதரவற்ற இல்லத்தைத் தொடங்கினார். கடந்த 1926 ஜூன் 8-ம் தேதி தனது 50-வது வயதில் மரியம் திரேசியா உயிரிழந்தார்.
கடந்த மாதம் ஒலிபரப்பான ‘மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சி யில் கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். இந்தியா மட்டுமன்றி உலகத் தலைவர்கள் பலரும் மறைந்த கேரள கன்னியாஸ்திரிக்கு புகழாஞ்சலி செலுத்தினர்.
வாடிகன் வெளியிட்ட செய்தியில், " ஏசு கிறிஸ்துவால் ஈர்க்கப்பட்டு கன்னியாஸ்திரியான த்ரேசியா, ஏழைகளுக்கு உதவி செய்தல், நோயுற்றவர்களுக்கு சேவை செய்தல், தனிமையில் இருப்பவர்களுக்கு ஆதரவாகப் பேசுதல் போன்ற சேவைகளை த்ரேசியா செய்தவர். த்ரேசியா உயிரோடு இருந்த காலத்தில் தீர்க்கத்தரிசாயக இருந்து அறிவித்தல், காயங்களை, நோய்களை குணப்படுத்துல் போன்ற தன்மைகளை கடவுளால் பெற்றிருந்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
, பிடிஐ