

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அள்வுகோலில் 5.7 ஆகப் பதிவாகியது.
இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்கப் புவியியல் மையம், "ஜப்பானில் சிபா கென் மாகாணத்தில் இன்று (சனிக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 80 கிலோ மீட்டர்.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் இல்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
இந்நிலையில் சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் ஜப்பானைத் தாக்கி வருகிறது. இந்தப் புயல் காரணமாக கடந்த 61 வருடங்களில் இல்லாத அளவு கடுமையான மழையை ஜப்பான் சந்திக்க இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை அளித்து நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் 1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த புயலுக்குப் (இப்புயலில் 1000க்கும் அதிகமாக மக்கள் பலியாகினர்) பிறகு ஏற்பட உள்ள சக்திவாய்ந்த புயல் இதுவாகும்.
புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஜப்பான் அரசு முன்னரே இறங்கி இருந்தது. இந்த நிலையில் ஹகிபிஸ் புயல் தாக்கத்திலிருந்து ஜப்பானை காக்க #PrayForJapan என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் நெட்டிசன்களால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.