

இஸ்லாமாபாத், பிடிஐ
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தனது கடைசி துருப்புச் சீட்டை பயன்படுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் இதனைப் புறக்கணிப்பதாக இம்ரான் கான் மேலும் குற்றம்சாட்டினார்.
காஷ்மீர் மக்களுடன் தாங்கள் ஒருங்கிணைவதாகக் காட்டும் மனிதச் சங்கிலி நிகழ்வில் இஸ்லாமாபாத்தில் பங்கேற்ற இம்ரான் கான், பன்னாட்டு ஊடகங்கள் ஹாங்காங்கில் நடைபெறும் போராட்டங்களை முழு வீச்சில் எழுதி வருகின்றன ஆனால் காஷ்மீர் விவகாரத்தை எழுதுவதில்லை என்று சாடினார் இம்ரான் கான்.
“நரேந்திர மோடி தனது கடைசி துருப்புச் சீட்டை பயன்படுத்தியுள்ளார், ஆனால் காஷ்மீர் மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. 70 ஆண்டுகளாக அவர்கள் என்ன மாதிரியான சூழ்நிலைக்கு ஆட்படுத்தப்பட்டார்களோ அது அவர்களிடமிருந்து அச்சத்தைப் போக்கியிருக்கும்” என்று இம்ரான் கான் பேசினார்.