

துருக்கியின் தாக்குதல் காரணமாக சிரியாவின் வடக்குப் பகுதியில் சுமார் 70,000க்கும் அதிகமான மக்கள் புலம்பெயர்ந்துள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக உணவு திட்டம் கூறும்போது,” சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படைகளுக்கு எதிராக துருக்கி இரண்டாவது நாளாக தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 70,000க்கும் அதிகமான மக்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் ஐ. நா செய்தித் தொடர்பாளர் சிரியாவின் வடக்கு பகுதியில் சுமார் 6 லட்சத்துக்கு மக்கள் உணவு தேவைப்படுகிறது என்பதை போரிடுபவர்களுக்கு நினைவுப்படுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் துருக்கியின் தாக்குதலுக்கு இதுவரை 300க்கும் அதிகமான குர்து படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும், திட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று துருக்கி தெரிவித்துள்ளது.
முன்னதாக துருக்கி -சிரியா எல்லைப் பகுதியில் உள்ள குர்து படைகளை அழிப்பதன் மூலம் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று கருதி, குர்து படைகள் மீது ராணுவத் தாக்குதல் நடைபெறும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்தார்.
சிரியாவில் குர்து படைகளுக்கு ஆதரவு அளித்த அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவதாக ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து துருக்கி தனது தாக்குதலை புதன்கிழமை தொடர்ந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக துருக்கி சிரியாவின் வடக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பதற்றமான சூழ்நிலையை எதிர் கொண்டுள்ளனர்.
குர்து படைகள் மீதான துருக்கியின் இந்த நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.