

சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் இவ்வார இறுதியில் ஜப்பானைத் தாக்க உள்ளது. இந்தப் புயல் காரணமாக கடந்த 61 வருடங்களில் இல்லாத அளவு கடுமையான மழையை ஜப்பான் சந்திக்க இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஜப்பான் வானிலை மையம் தரப்பில், “ஹகிபிஸ் (வேகம்) புயல் இவ்வார இறுதியில் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களைத் தாக்க உள்ளது. ஹகிபிஸ் புயலால் அதிகப்படியான கனமழை, அசுரத்தனமான காற்று, வெள்ளம் ஏற்படும்.
டோக்காய், கன்டோ ஆகிய பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படலாம். இப்புயல் காரணமாக ஜப்பான் வரலாற்றில் 61 ஆண்டுகள் இல்லாத கனமழையைச் சந்திக்க உள்ளது.
ஜப்பானில் 1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயலுக்குப் (இப்புயலில் 1000க்கும் அதிகமாக மக்கள் பலியாகினர்) பிறகு ஏற்பட உள்ள சக்திவாய்ந்த புயல் இது என்று ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனமழை பெய்யும் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஜப்பான் அரசு இறங்கியுள்ளது. பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக ஜப்பானில் ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.