Published : 11 Oct 2019 11:28 AM
Last Updated : 11 Oct 2019 11:28 AM

38 ஆண்டுகளில் முதல் முறை: கால்பந்துப் போட்டியை பார்த்து ரசித்த ஈரான் பெண்கள்

தெஹ்ரான்

38 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஆடவர் விளையாடும் கால்பந்துப் போட்டியை ஈரான் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் நேற்று மைதானத்துக்கு வந்து கண்டு ரசித்தனர்.

ஈரான் நாட்டில் ஆடவர் விளையாடும் கால்பந்துப் போட்டியை பார்ப்பதற்கு கடந்த 1981-ம் ஆண்டு முதல் பெண்களுக்கு அனுமதியில்லை. அவ்வாறு மீறி பார்க்க முயன்ற ஒரு பெண், சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இந்த விவாகாரம் சர்வதேச அளவில் விஸ்வரூபமெடுத்தது. இதில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் தலையிட்டு ஈரான் அரசிடம் பேச்சு நடத்தியது. அந்தப் பேச்சின் முடிவில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது

இதைத் தொடர்ந்து, தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஆசாதி அரங்கிற்கு நேற்று 3,500க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து கால்பந்துப் போட்டியை கண்டு ரசித்தனர். இந்த ஆசாதி மைதானத்தில் நேற்று கம்போடியா அணிக்கும், ஈரான் அணிக்கும் உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டி நடந்தது. இந்த ஆட்டத்தில் ஈரான் அணி 14-0 என்ற கோல் கணக்கில் கம்போடியாவை வீழ்த்தியது.

ஈரான் முஸ்லிம் பெண்கள், கையில் ஈரான் நாட்டுக் கொடியையும், பதாகைகளையும் ஏந்தி கோஷமிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் போட்டியைக் கண்டு ரசித்தனர்.

ஏராளமான பெண்கள் தங்களுக்கு 38 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாகக் கிடைத்த வாய்ப்பை நினைத்து கண்ணீர் விட்டு அழுதனர்.

இதுகுறித்து பிபிசி வெளியிட்ட செய்தியில், "கடந்த 1981-ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண்கள் ஆடவர் கால்பந்துப் போட்டியை பார்த்துள்ளார்கள். அரங்கில் இருந்த பெண்கள் மிகுந்த உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் போட்டியைப் பார்த்தார்கள்.

ட்விட்டரில் ஒரு பெண் பதிவிட்ட கருத்தில், " 3 மணிநேரம் நாங்கள் மகிழ்ச்சியாகச் செலவிட்டோம். அனைவரும் சிரித்து மகிழ்ந்தோம், ஏராளமானோர் உரிமை மீண்டும் கிடைத்ததை நினைத்து கண்ணீர் விட்டு அழுதார்கள். மகிழ்ச்சியோடு இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பெண் ட்விட்டரில் கூறுகையில், "எங்கள் வாழ்க்கையில் மிகவும் தாமதமாக இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனாலும், அரங்கிற்கு வந்த இளம் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பது எனக்குத் திருப்தி அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்பான்டினோ கூறுகையில், "ஈரான் எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது. இந்த நடவடிக்கையைத்தான் பல ஆண்டுகளாக பெண்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

உற்சாகம், மகிழ்ச்சி, ஆர்வம் அனைத்தையும் பெண்களின் முகத்தில் பார்க்க முடிந்தது. வளர்ச்சி படிப்படியாகத்தான் வரும் என்பதை வரலாறு உணர்த்துகிறது. நம்முடைய பயணத்தின் முதல்படி, இனிமேல் நிறுத்தாமல் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

கால்பந்து ரசிகை ஒருவர் கடந்த சில மாதங்களுக்குப் பின் போட்டியைக் காண மைதானத்துக்குச் சென்றார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டநிலையில், அவர் பிரச்சினை செய்ததையடுத்து கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு கடும் சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சிறைக்குச் செல்லும் முன்பே மர்மமான முறையில் திடீரென மரணமடைந்தார். அந்த ரசிகையின் இறப்பு சர்வதேச அளவிலும், பிபா கால்பந்து அமைப்பின் மனித உரிமை ஆர்வலர்களும் கையில் எடுத்து ஈரான் அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார்கள். மேலும் பிபா கால்பந்து சம்மேளனம் சார்பிலும் ஒரு குழு ஈரான் சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தியது. இதையடுத்து ஈரான் அரசு கால்பந்து விளையாட்டைப் பார்க்க பெண்களுக்கு அனுமதியளித்தது.


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x