ஈரானை உலுக்கிய சஹர் கோடயாரி மரணம்: மைதானத்தில் அமர்ந்து விளையாட்டைப் பார்க்க பெண்களுக்கு அனுமதி

சஹர் கோடயாரி (படம் ட்விட்டர் உதவி)
சஹர் கோடயாரி (படம் ட்விட்டர் உதவி)
Updated on
2 min read

பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் ஈரான் நாட்டில் கால்பந்தாட்டத்தை மைதானத்தில் காண பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டில் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிப்பதற்குப் பெண்களுக்கு 1981-ம் ஆண்டு முதல் தடை இருக்கிறது. அந்நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புகள் இதை எதிர்த்து வருகின்றன.

ஈரானின் மைதானங்களில் விளையாட்டுகளைக் காண பெண்களுக்கு அனுமதி கோரி பல போராட்டங்களை நடத்தியவர் சஹர் கோடயாரி (28). இவர் 'புளு கேர்ள்' (அவருடைய விருப்பமான கால்பந்தாட்ட அணியின் சீருடை நிறம்) என்று அந்நாட்டு மக்களால் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் சஹர் கோடயாரி, கடந்த மார்ச் மாதம் ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. இது தொடர்பாக நடந்த வழக்கை 6 மாதமாக சஹர் எதிர்கொண்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் சஹர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று தெரியவந்தது. இதனால் சஹர் நீதிமன்றத்தில் தீக்குளித்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.

பெண்கள் விண்வெளியை அடைந்துவிட்டனர் என நாம் மார்தட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில், தாங்கள் விரும்பிய விளையாட்டை நேரில் கண்டு ரசிக்கக்கூடப் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உலகம் முழுக்கக் கண்டனக் குரல்கள் எழுந்தன.

சஹரின் மரணத்துக்குப் பிறகு விளையாட்டு மைதானங்களில் பெண்களை அனுமதிக்கக் கோரிய போராட்டம் வலுப்பெற்றது. இது உலக நாடுகள் பலவற்றிலும் எதிரொலித்தது. பல்வேறு கால்பந்தாட்ட அமைப்புகள் பெண்களுக்கு எதிரான ஈரானின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தன.

மேலும் சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான பிஃபா, ஈரான் தனது முடிவை திரும்பப் பெற்று பெண்கள், விளையாட்டைப் பார்க்க கால்பந்தாட்ட மைதானத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இல்லையேல் ஈரான் அணி நீக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

இதனைத் தொடர்ந்து ஈரானில் கால்பந்தாட்டத்தை மைதானங்களில் காண பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், ''என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை.. நான் இந்தத் துறையில் பணிபுரிந்து இது நடக்கப் போகிறது என்பதை நம்ப முடியவில்லை. நான் எல்லாப் போட்டிகளையும் தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். தற்போது எனக்கு நேரடி அனுபவம் கிடைக்கப் போகிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in