

ஐக்கிய நாடுகள் சபை 230 மில்லியன் டாலர் பணப் பற்றாக்குறையுடன் செயல்பட்டு வருவதாகவும், வரும் அக்டோபர் மாதத்திற்குள் பணம் முற்றிலுமாக இல்லாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் கூறும்போது, “2019 ஆம் ஆண்டில் ஐ.நா. சபைக்குத் தேவைப்படும் நிதியில் வெறும் 70% சதவீதம் மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகள் வழங்கியுள்ளன. இதன் காரணமாக 230 மில்லியன் டாலர் பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்துக்குள் பணம் முற்றிலும் இல்லாமல் போகலாம். எங்களது நிதி பற்றாக்குறையைப் போக்குவதற்கான பொறுப்பு உறுப்பு நாடுகளிடம்தான் உள்ளது” என்றார்.
ஐ. நா. சபையில் ஏற்பட்டுள்ள பணப் பற்றாக்குறை காரணமாக கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை ஒத்திவைத்தல், செலவுகளைக் குறைத்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட இருக்கிறோம் என்றும் குத்தரெஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் குத்தரெஸ் பணப் பற்றாக்குறையப் போக்க உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், உறுப்பு நாடுகள் வழங்க மறுத்துவிட்டன என்ற ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2018 - 2019 ஆம் ஆண்டுவரை ஐ.நா. சபைக்குத் தேவையான பட்ஜெட் 5.4 பில்லியன் டாலர். இதில் அமெரிக்கா 22% சதவீதம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.