

ஹாங்காங்கில் நடக்கும் வன்முறை காரணமாக மிக ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது என்று ஹாங்காங் தலைவர் கேரி லேம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரி லேம் பத்திரிகையாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது, “ ஹாங்காங்கில் நடக்கும் வன்முறை சட்ட ஒழுங்கை முற்றிலுமாக புறக்கணிக்கும் வகையில் உள்ளது. இம்மாதிரியான வன்முறைகள் மிகப் பெரிய அளவிலான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. இதன் காரணமாக ஆபத்தான சூழல் உருவாகி உள்ளது. இம்மாதிரியான பயங்கரவாத செயல்கள் தொடர்ந்து பரவுவதால் சட்ட ஒழுங்கை மீட்பது கடினமாகிறது” என்றார்.
ஹாங்காங்கில் வன்முறையைத் தடுக்க போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் முகமூடி அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் எதிர்த்து போராட்டக்காரர்கள் கடந்த வாரம் பேரணி சென்றனர்.
தொடர்ந்து ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றது இதன் காரணமாக ஹாங்காங்கில் பொருளாதாரம், சுற்றுலா மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹாங்காங் போராட்டப் பின்னணி
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹாங்காங். சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.
இந்நிலையில், ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவை கடந்த ஜூன் மாதம் ஹாங்காங் கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கைதும் செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த மசோதாவைத் திரும்பப் பெறுவதாக ஹாங்காங் அரசு அறிவித்தது.
எனினும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஹாங்காங் போராட்டக்காரர்கள் அவர்களது பிற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.