Published : 06 Oct 2019 08:57 AM
Last Updated : 06 Oct 2019 08:57 AM

சீனாவின் ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரி வீட்டில் 13.5 டன் தங்கம் பறிமுதல்

சீனாவில் ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரி ஒருவரின் வீட்டில் இருந்து 13.5 டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது வங்கிக் கணக்கில் 3 ஆயிரம் கோடி பவுண்டு டெபாசிட் இருப்பதும் தெரியவந்துள்ளது.

சீனாவின் ஹைனன் மாகாணத் தில் உயரதிகாரியாக இருப்பவர் ஜாங் கி (58). இவரது வீட்டில் ஊழல் தடுப்பு ஆய்வாளர்கள் இம்மாத தொடக்கத்தில் சோதனை நடத்தினர். இதில் ஆயிரக்கணக் கான தங்கக் கட்டிகளையும் பெருமளவு பணத்தையும் கண்டு அதிகாரிகள் மலைத்துப் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையில் சுமார் ரூ.4,542 கோடி மதிப்பிலான 13.5 டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஜாங் கி-யின் வங்கிக் கணக்கில் 3,000 கோடி பவுண்டுகள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,62,057 கோடி) இருப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பல ஆடம்பர வீடுகளை ஜாங் கி லஞ்சமாக பெற்றிருக்க லாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஹைனன் தலைநகர் ஹைக்கோவ் நகர கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக ஜாங் கி பதவி வகித்து வந்தார். இது ஹைக்கோவ் நகர மேயர் பதவிக்கு இணையானது ஆகும். மேலும் ஹைனன் மாகாண நிலைக்குழு உறுப்பினராகவும் அவர் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் சோதனையில் பெருமளவு தங்கம் மற்றும் வங்கி டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜாங் கி-யின் இரு பதவிகளையும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பறித்துள்ளது.

மேலும் அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜாங் கி மீதான ஊழல் புகார் உறுதி செய்யப்படுமானால் சீனாவின் மிகப் பெரிய பணக்காரர் ஜாக் மாவை விட ஜாங் கி பணக்காரராக இருப்பார் என போர்ப்ஸ் இதழ் தெரிவிக்கிறது.

கிழக்கு சீனாவின் அன்ஹுயி மாகாணத்தில் பிறந்த ஜாங் கி கடந்த 1983-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ஹைக்கோவ் நகர கட்சிப் பதவிக்கு வருவதற்கு முன் சன்யா நகரின் துணை மேயராகவும் டான்சோவ் நகரின் மேயராகவும் பதவி வகித்தார். இம்மூன்று நகரங்களும் ஹைனன் மாகாணத்தை சேர்ந்தவை ஆகும்.

சீன அதிபராக ஜி ஜின்பிங் கடந்த 2012-ல் பதவியேற்றது முதல் ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வரு கிறார். சீனாவில் கடந்த 7 ஆண்டு களில் லஞ்சம் வாங்கியதாக 53 அதிகாரிகள் சிக்கியுள்ளனர். சீனாவில் இந்த ஆண்டில் ஊழல் புகாரில் விசாரணைக்கு ஆளாகியிருக்கும் 17-வது உயரதி காரி ஜாங் கி என சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x