

உறவு முறையில்லாத சுற்றுலாப் பயணிகள் (ஆண், பெண்) ஓட்டல் அறைகளைப் பகிர்ந்துகொள்ள சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளது.
மத்தியக் கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் சவுதி பழமைவாதக் கொள்கைகளுக்கு முன் உதாரணமாக இருந்து வந்தது. இந்நிலையில் சவுதி அரேபியா சமீப ஆண்டுகளாக சீர்திருத்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதில் ஒரு பகுதியாக உறவு முறையில்லா வெளிநாட்டினர் ( ஆண், பெண்) சவுதியில் உள்ள ஓட்டல்களில் அறைகளைப் பகிர்ந்து கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை சவுதி சுற்றுலாத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சவுதி ஊடகங்கள், “அனைத்து சவுதி குடிமக்களும் ஓட்டல்களில் தங்குவதற்கு அவர்களது குடும்ப அட்டையைக் காண்பிக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குப் பொருந்தாது. சவுதி பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களும் ஓட்டல்களில் தனியாக முன்பதிவு செய்து தங்கலாம்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
சவுதி எண்ணெய் ஏற்றுமதியில் வரும் வருமானத்தைத் தவிர்த்து பிற துறைகளில் வருமானம் ஈட்ட முயற்சி செய்து வருகின்றது. முக்கியமாக சுற்றுலாத் துறையில் சீர்திருத்தங்களைச் செய்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது.