

இராக்கில் நிலவும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டும் என்று ஷியா பிரிவின் மத குருவும் அரசியல் தலைவருமான முக்ததா அல் - சதர் தெரிவித்துள்ளார்.
இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இராக் பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக, போராட்டக்காரர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தலைநகர் பாக்தாத் உள்ளிட்ட பல பகுதிகளில் பிரதமர் அதில் அப்துல் மஹ்தி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது.
பாக்தாத்தின் மத்திய சதுக்கத்தை நோக்கி ஆயிரம் பேர் கலந்துகொண்ட அரசுக்கு எதிரான பேரணியில் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
இந்நிலையில் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளதாகவும், 2,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் இராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று இராக் அரசு பதவி விலக வேண்டும் என்று ஷியா முஸ்லிம்களின் மத குருவும், இராக்கின் முக்கிய அரசியல் தலைவருமான அதில் அப்துல் மஹ்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”இராக் அரசு முழுவதுமாக ராஜினாமா செய்து ஐக்கிய நாடுகள் சபை பார்வையில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என்றார்.
அதுமட்டுமில்லாது இராக்கில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு அரசு பதிலளிக்கும் வரை நாடாளுமன்ற அமர்வை உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இராக்கில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவருமாறு ஐக்கிய நாடுகள் சபை, அரசை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.