

ஹாங்காங் நிர்வாக இயக்குனர் கேரி லேம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார்.
ஹாங்காங் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து ஹாங்காங்கில் நடந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை அடைந்துள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் முகமூடியை அணியக் கூடாது என்று ஹாங்காங் அரசு தெரிவித்தது. இதற்கு போராட்டக்காரர்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஹாங்காங்கில் நடக்கும் தொடர் போராட்டம் குறித்து மலேசியப் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோலாலம்பூரில் நடந்த கருந்தரங்கில் மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது கூறும்போது, “கேரி லேம் அவரது தலைவர்களுக்குக் கீழ்படியும் அதே சமயத்தில், அவரது மனசாட்சியிடமும் கேட்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு சிறந்த முடிவு ராஜினாமா செய்வதுதான்” என்று தெரிவித்தார்.
பின்னணி:
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹாங்காங். சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.
இந்நிலையில், ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவை கடந்த ஜூன் மாதம் ஹாங்காங் கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கைதும் செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த மசோதாவைத் திரும்பப் பெறுவதாக ஹாங்காங் அரசு அறிவித்தது.
எனினும் கடந்த 4 மாதங்களாக போராட்டக்காரர்களின் பிற தேவைகளையும் நிறைவேற்றக் கூறி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.