

அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை தலிபான் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும் ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக்கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதனை மையமாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக 9 சுற்றுகள் அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார்.
மேலும், ஆப்கன் தேர்தல் முடிவடைந்த பிறகே தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை என ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்முத் குரேஷியை தலிபான் பிரதிநிதிகள் இன்று (வியாழக்கிழமை) சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பின் மூத்த தலைவரும் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பு குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷு கூறும்போது, “ஆப்கனில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாக இரு நாடுகளும் கடந்த 40 ஆண்டுகளாக நிலையற்ற தன்மையைச் சந்தித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் நடந்த ஆலோசனை குறித்த முழு தகவல் இதுவரை வெளிவரவில்லை.