Published : 03 Oct 2019 06:09 PM
Last Updated : 03 Oct 2019 06:09 PM

இந்திய- அமெரிக்க போலீஸ் அதிகாரியின் இறுதிச்சடங்கு; ஆயிரக்கணக்கானோர் திரண்டு புகழஞ்சலி

ஹூஸ்டன்,

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அதில் கலந்துகொண்ட ஏராளமான அரசு அதிகாரிகள் அவரைப் பாராட்டினர்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஹூஸ்டனின் வடமேற்கில் இந்திய-அமெரிக்க காவல்துறை அதிகாரி சந்தீப் சிங் தலிவால் (42), மதிய நேரப் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்றதால் அவரைத் தடுத்து நிறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் துப்பாக்கி எடுத்து தலிவாலை சரமாரியாக சுட்டுத் தள்ளினார். இதில் சம்பவ இடத்திலேயே தலிவால் சரிந்து விழுந்தார். கடமையின்போது உயிரிழந்த போலீஸ் அதிகாரியின் இறுதிச் சடங்கில் அவரைக் கவுரவிக்கும் விதமாக அனைத்துத் தரப்பு மக்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

அமேஸிங் கிரேஸ் என்ற பாடல் இசைக்கப்பட ஹெலிகாப்டர் வானில் பறந்துவர இறுதி ஊர்வலம் சென்றது. மறைந்த அதிகாரியின் புகழ்பாடும் பலகைகளை மக்கள் ஏந்திச் சென்றனர். வழியெங்கும் மலர்களைத் தூவியும் அவரது இறுதிப் பயணம் நடந்தது.

இறுதிச் சடங்கில், தன்னமலமற்ற சேவைக்குச் சொந்தக்காரர் என்று அமெரிக்க ராணுவத் தளபதி சந்தீப் சிங் தலிவாலுக்குப் புகழஞ்சலி செலுத்தினர். டி டெக்ஸாஸ் மாகாண செனட்டர் பேசுகையில், பணிவானவர், அதேநேரம் துணிச்சலானவர், எந்த எதிர்மறை சிந்தனையும் அவரிடம் இருந்ததில்லை என்றார்.

முழுநாள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு உணர்ச்சிப் பெருக்காக பாராட்டிப் பேசி தங்கள் புகழ்மாலைகளை அவருக்குச் சூடினர். அப்போது, பாரம்பரிய சீக்கிய இறுதிச்சடங்குகளும் சட்ட அமலாக்கத்தின் இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்டன.

ஹாரிஸ் கவுண்டி ஷெரீப் அலுவலக பணியாளர்கள் தலிவால் உடல் மீது அமெரிக்கக் கொடியைப் போர்த்தினர். இறுதிச் சடங்கின்போது சந்தீப் சிங் தலியாலுக்கு 21 துப்பாக்கிகள் முழங்க அமெரிக்காவின் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. சீக்கிய மக்களும் அலுவலக ஊழியர்கள் மட்டுமின்றி அமெரிக்காவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.

10,000 க்கும் மேற்பட்ட சீக்கியர்களைக் கொண்ட ஹாரிஸ் கவுண்டியில் முதல் சீக்கிய ஷெரிப்பின் துணைத் தலைவராக சந்தீப் சிங் தலிவால் இருந்தார். தாடியை வளர்க்கவும், பணியில் தலைப்பாகை அணியவும் சீக்கியர்கள் அனுமதிக்கப்பட்டபோது அவர் தேசிய தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x