

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு தபால் தலையை பிரான்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தேசத் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் இந்தியா முழுவதும் புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியிலுள்ள காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் காந்தியின் பிறந்த நாளுக்கு தங்கள் வாழ்த்தைப் பதிவு செய்தனர். இந்நிலையில் காந்தியின் 150 ஆண்டு பிறந்த நாளைத் தொடர்ந்து சிறப்பு தபால் தலையை பிரான்ஸ் தபால் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸில் உள்ள இந்தியத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளைத் தொடர்ந்து பிரான்ஸ் தபால் துறையுடன் இணைந்து இந்தியத் தூதரகம் தபால் தலையை வெளியிட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளது.