

வாஷிங்டன்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பின் 370-வது பிரிவு நீக்கப்பட்டது நீண்டகாலம் காத்திருந்து எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை, இதைத் தடுக்க பாகிஸ்தான் தரப்பில் இருந்து நடவடிக்கை வரும் என எதிர்பார்த்தோம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள தி ஹெரிட்டேஜ் பவுண்டேஷன் சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜெயசங்கர் பதில் அளித்துப் பேசியதாவது:
"ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பின் ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக பொதுவான குற்றச்சாட்டு எழுகிறது. ஆனால், நாங்கள் இந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவராமல் 370-வது பிரிவை நீக்கி இருந்தால், கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தான் செய்திருந்த தீவிரவாதத் தூண்டுதல் பணியை இன்னும் வேகமாகச் செய்திருக்கும்.
பாகிஸ்தானிடம் நாங்கள் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? எங்களைப் பொறுத்தவரை ஜம்மு காஷ்மீரில் அமைதியும், மகிழ்ச்சியும் வர வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், பாகிஸ்தான் அதை ஒருபோதும் கொண்டுவரவிடமாட்டார்கள்.
அவர்கள் தீவிரவாதம் எனும் மோசமான, கொடூரமான வண்ணத்தை காஷ்மீர் மீது பூசுவதுதான் திட்டம், விருப்பம். அவர்களின் 70 ஆண்டுகள் திட்டம் சிதைந்துவிடக்கூடாது என்று கருதுகிறார்கள்.
இந்தியாவிலோ அல்லது ஜம்மு காஷ்மீரிலோ நடக்கும் தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதிகள்தான் காரணமாக இருந்திருக்கிறார்கள். கடந்தகால வரலாற்றில் ஆதாரங்கள் இருக்கின்றன.
காஷ்மீரை பற்றி எரியச் செய்வதுதான் அவர்களின் கொள்கை. ஆனால், இந்தத் திட்டங்களை தொடர்ந்து முறியடித்து வந்துள்ளது இந்திய அரசு. இன்னும் தொடர்ந்து முறியடித்து வெற்றி பெறுவோம்.
ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவை ரத்து செய்தது என்பது நீண்டகாலமாக காத்திருந்து எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை. இந்த நடவடிக்கை எடுத்த பின், பாகிஸ்தானிடம் இருந்து அலறல் கேட்கிறது. அணு ஆயுதப் போர் மூளும் என்று மிரட்டுகிறது. இதுபோன்ற வார்த்தைகளை மிக முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள்தான் (பிரதமர் இம்ரான்கான்) பேசுகின்றனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அந்தப் பகுதிகளை சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது".
இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.
பிடிஐ