

கிரெட்டாவுக்கு ஆதரவாக பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ குரல் கொடுத்துள்ளார்.
ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் என்ற 16 வயது சிறுமி காலநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க தனி நபராகப் போராடத் தொடங்கி உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கெனவே ஸ்வீடனில் பருவநிலையைக் காக்க பள்ளி வேலை நிறுத்தம் என்ற போராட்டத்தை ஆரம்பித்து அதை சர்வதேச அளவில் மிகப்பெரிய இயக்கமாக மாற்றியுள்ளார். ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் சமீபத்தில் கிரெட்டா பேசிய உரைதான் தற்போது சர்வதேச அளவில் ட்ரெண்ட்.
இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகரும், தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவருமான லியோனார்டோ டிகாப்ரியோ கிரெட்டா துன்பெர்க்குக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற க்ளோபல் சிட்டிசன் ஃபெஸ்டிவல் என்ற நிகழ்ச்சியில் டிகாப்ரியோ கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசும்போது, ”கடந்த வாரம் இளம் வயதினர் உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர். லட்சக்கணக்கான தனி நபர்கள் தங்களுடைய பள்ளிகளில் இருந்தும், பணியிடங்களில் இருந்தும் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் நமது கிரகத்துக்குத் தேவையான உண்மையான தலைமைப் பண்புக்கு உதாரணமாகத் திகழ்ந்துள்ளார்கள். நடவடிக்கைகள் இல்லாத காலகட்டம் முடிந்துவிட்டது என்று அந்த இளைஞர்கள் உறுதியாகவும், தெளிவாகவும் கூறியுள்ளார்கள்’’ என்று டிகாப்ரியோ கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைக் குறிப்பிட்டு, ’கிணறுகள் முற்றிலுமாக வறண்டுவிட்டன. தென்னிந்திய நகரமான சென்னையை மழை மட்டுதான் இந்த சூழ்நிலையில் காக்கமுடியும்’ என்று டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பலருடைய பாராட்டுகளையும் பெற்றிருந்தது.