

இஸ்லாமாபாத்,
நவம்பர் மாதம் நடக்க உள்ள கர்தார்பூர் சீக்கிய குருத்வாரா வழித்தடத் திறப்பு விழாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
ஆனால், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பது குறித்தோ, இந்திய அரசு சார்பில் யாருக்கு அழைப்பு விடுப்பது குறித்தோ பாகிஸ்தான் தெரிவிக்கவில்லை
கர்தார்பூர் வழித்தடப் பணிகள் தொடர்பாக மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தையாக இது அமைந்தது. வாகா-அட்டாரி எல்லையில், இந்தியப் பகுதிக்கு உள்பட்ட அட்டாரியில் இக்கூட்டம் நடைபெற்றது.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ், தனது வாழ்நாளின் இறுதிக்காலத்தை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக, அங்கு தர்பார் சாஹிப் குருத்வாரா அமைக்கப்பட்டது.
சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் குருத்வாரா அமைந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தின் தேரா பாபா நானக் பகுதியிலுள்ள குருத்வாராவையும், கர்தார்பூர் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையிலும், இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இன்றி புனிதப் பயணம் மேற்கொள்ளவும் இந்த வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
இந்த வழித்தடத்தில் இந்தியாவில் இருந்து செல்லும் சீக்கியர்கள், யாத்ரீகர்கள் விசா இன்றி கர்தார்பூருக்குச் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு இந்தியாவில் இருந்து 5 ஆயிரம் யாத்ரீகர்களை கர்தார்பூர் குருத்வாராக்குள் அனுப்புவதற்கு பாகிஸ்தான் சம்மதித்துள்ளது.
இதுதவிர சிறப்புப் பண்டிகைகள், திருவிழாக்கள் ஆகியவற்றின் போதும் யாத்ரீகர்களை அனுப்புவதற்கு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. தற்போது ஜீரோ பாயின்ட் எனும் இடத்தில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. வரும் நவம்பர் மாதம் கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட உள்ளது.
இந்த சூழலில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி நிருபர்களுக்கு இஸ்லாமாபாத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கர்தார்பூர் வழித்திடம் திறப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், "நவம்பர் மாதம் கர்தார்பூர் வழித்தடத் திறப்பு விழாவுக்கு இந்தியாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளோம்.
முறைப்படியான அழைப்பு மன்மோகன் சிங்குக்கு விரைவில் அனுப்புவோம். மன்மோகன் சிங் மதரீதியாக அதிகமான பற்று உடையவர். பாகிஸ்தான் மக்களால் அதிகமாக மதிக்கப்படுகிறவர். அதனால்தான் அவருக்கு அழைப்பு விடுக்க இருக்கிறோம். சீக்கியர்களின் குரு குருநானக்கின் 550-வது பிறந்த நாளுக்கு கர்தார்பூர் வரும் அனைத்து சீக்கியர்களையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்" எனத் தெரிவித்தார்.
பிடிஐ