

பாகிஸ்தானில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிப்படைந்த பகுதிகளை பிரதமர் இம்ரான் கான் பார்வையிட்டார்.
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள இஸ்லமாபாத், பெஷாவர், லாகூர் பகுதிகளில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 10 கி.மீ. இந்த நிலநடுக்கத்திற்கு 37 பேர் பலியாகினர் 400க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். எனவே மீட்புப் பணிகளைத் துரிதமாகச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
இந்நிலையில் நாடு திரும்பிய இம்ரான் கான் நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிப்படைந்த மீர்பூர் பகுதியை இன்று (திங்கட்கிழமை) பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து நேரில் நலம் விசாரித்தார் இம்ரான் கான். இந்தச் சந்திப்பில் இம்ரான் கானுடன் பாகிஸ்தானின் முக்கிய அமைச்சர்களும் உடன் வந்திருந்தனர்.
இதற்கிடையில், நிலநடுக்கத்தினால் பாதிப்படைந்த மக்களின் சொத்து இழப்புகளை ஆய்வுசெய்ய 107 அதிகாரிகளை உள்ளடக்கிய 22 குழுக்களை பாகிஸ்தான் அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு வரும் 10 நாட்களில் இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.