Published : 30 Sep 2019 11:48 AM
Last Updated : 30 Sep 2019 11:48 AM

ஃபேஷன் நிறுவனமான ஃபார்எவர்-21 திவால் நோட்டீஸ்: 178 கடைகளை உலகம் முழுவதும் மூட முடிவு

வாஷிங்டன்

சில்லறை விற்பனைப் பிரிவில் உலக அளவில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த, இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவந்த ஃபார்எவர்-21 ஃபேஷன் நிறுவனம் அமெரிக்காவில் சேப்டர்-11 எனும் பிரிவில் திவால் நோட்டீஸ் அளித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சேப்டர்-11 பிரிவில் திவால் நோட்டீஸ் அளிக்கும்போது நிறுவனம் திவால் ஆவதைத் தடுக்கும் வகையில் உதவிகோரும் மனுவாகும். நிறுவனத்தை திவாலில் இருந்து காக்க கூடுதல் கடனுதவி கோருவது, கடனில் இருந்து நிறுவனம் மீண்டுவர உதவி கோருவது ஆகியவற்றைக் குறிக்கும். ஆனால், ஏறக்குறைய இது திவால் நோட்டஸ் போன்றதுதான் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆன்லைன் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாததால், உலகில் பல்வேறு நாடுகளில் இருக்கும் கிளைகளை மூட ஃபார்எவர்-21 நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த 1984-ம் ஆண்டு ஃபார்எவர்-21 நிறுவனம் தொடங்கப்பட்டு, அதன்பின் ஹெச்அன்ட்எம் ஜாரா ஆகியவற்றுடன் சேர்ந்து 1990களில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பிரபலமானது. வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி புதிய சலுகைகள், தள்ளுபடிகள் அளிப்பதால் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த ஃபார்எவர்-21 ஃபேஷன் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் முதல் 10,000 கோடி டாலர் வரை சொத்துகளும், கடன்களும் இருக்கின்றன. இந்த சூழலில் ஆன்லைன் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் டெலாவேர் நகரில் உள்ள திவால் நீதிமன்றத்தில் ஃபார்எவர்-21 மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெரும்பாலான கிளைகளை மூடுவதற்கு ஃபார்எவர்-21 நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால், மெக்ஸிகோ மற்றும் லத்தின் அமெரிக்காவில் தொடர்ந்து கிளைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

ஏறக்குறைய தற்போது இந்த நிறுவனத்துக்கு 57 நாடுகளில் 815 கடைகள் இருக்கின்றன. இதில் 180 கடைகள் வரை விரைவில் மூட இருக்கிறது. அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மெக்ஸிகோவில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாகவும், மற்ற நாடுகளில் கிளைகளைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜப்பான் சந்தையில் இருந்து ஃபார்எவர்-21 நிறுவனம் வெளியேறியது. அக்டோபர் மாதத்தில் ஜப்பானில் இருக்கும் 14 கிளைகளையும் மூடூகிறது ஃபார்எவர்-21 நிறுவனம்.
, ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x