

வாஷிங்டன்
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் மீது நடவடிக்கை எடுக்க, உக்ரைன் அதிபருக்கு நெருக்கடி அளித்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்த அமெரிக்க அதிகாரியைச் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹன்டர் ஆகியோர் உக்ரைன் நாட்டில் பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர். இந்தத் தொழிலில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் குறித்து விசாரணை நடத்துமாறு, அந்த நாட்டு அதிபர் விளாதிமிர் ஸெலென்ஸ்கிக்கு அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், அதற்காக உக்ரைனுக்கு அளித்து வந்த உதவித்தொகையை அவர் நிறுத்தி வைத்தார் என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இது, அமெரிக்க அரசியலில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தனது அரசியல் எதிரியும், ஜனநாயகக் கட்சியின் எதிர்கால அதிபர் வேட்பாளராக வரப்போகும் ஜோ பைடனை ஓரம் கட்டுவதற்காக, தனது பதவியை அதிபர் ட்ரம்ப் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்
இதற்காக மற்றொரு நாட்டுடன் சேர்ந்து ரகசியமான பேரத்தில் ஈடுபட்டுள்ளார் ட்ரம்ப் என்று ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டி, ட்ரம்ப்புக்கு எதிராக தகுதி நீக்க விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 12-ம் தேதி அமெரிக்க உளவுப்பிரிவான சிஐஏயில் பணியாற்றும் ஒரு அதிகாரிதான் இந்த விவகாரம் அனைத்தையும் வெளியே கொண்டுவந்தார். இது தொடர்பாக ஒரு புகார் கடிதத்தையும், சிஐஏ உளவுப்பிரிவு குழுவுக்குத் தலைவராக இருக்கும் குடியரசுக் கட்சியின் செனட்டர் ரிச்சார்ட் பார், ஜனநாயக்க கட்சியின் எம்.பி. ஸ்சிப் ஆகியோருக்குக் கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் அந்த அதிகாரி கூறுகையில், "நான் வெள்ளை மாளிகையில் பணியாற்றியபோது, "எனக்கு பல்வேறு அமெரிக்க மூத்த அதிகாரிகளிடம் இருந்து எனக்கு அமெரிக்க அதிபர் குறித்து தகவல்கள் வந்தன. அதில் அவர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலில், உக்ரைனைத் தலையிட வைப்பதற்கு மறைமுகமாகச் செயல்படுகிறார். இதற்காக முக்கிய எதிர்க்கட்சியின் வேட்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தூண்டுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கடிதத்தையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைத் தகுதி நீக்கம் செய்வதற்கான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறிவிட்டதாக நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அவரைப் பதவி நீக்கம் செய்தாலும் அவரை நீக்க முடியாது. குடியரசுக் கட்சி பெரும்பான்மையாக இருக்கும் மேலவையில் அவருக்கு எதிராக வாக்குகள் சேர்ப்பது கடினம். ஒருவேளை 20 வாக்குகளுக்கு மேல் அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராகக் கிடைத்தால் மட்டுமே அந்த அதிசய நிகழ்வு நடக்கும்.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று ட்விட்டரில் அந்த அமெரிக்க அதிகாரியை கடுமையாகத் தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். அதில், " அமெரிக்க மக்களைப் போல், நானும் என் மீது குற்றம் சாட்டிய அந்த அதிகாரியைக் காண ஆவலுடன் இருக்கிறேன். என் மீதான புகாரை வெளியே கொண்டுவந்த அதிகாரி, கூறியிருப்பதுபோல், நான் எந்த வெளிநாட்டுத் தலைவருடன் பேசவில்லை. அவ்வாறு நான் பேசியதாகக் கூறுவது உண்மையல்ல, தவறானது.
அவரின் பொய்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டை நான் கேட்டது இல்லை. செனட்டர்களுக்கு எழுதிய புகார் கடிதத்தில் மோசமான விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற வார்த்தைகள் அதிபரிடம் இருந்து வராது. இந்த விவகாரம் குறித்து அந்த அதிகாரியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என செனட்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஐஏஎன்எஸ்