

காஷ்மீர் மக்களுக்குத் துணை நிற்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று நாடு திரும்பிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவரது கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் இம்ரான் கான் பேசும்போது, “காஷ்மீர் மக்களுக்காகத் துணை நிற்பது என்பது ஜிகாத் ( இஸ்லாமிய எதிரிகளுக்கு எதிரான போர்). அல்லா எங்களுடன் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக நாம் இதனைச் செய்ய வேண்டும். இது ஒரு போராட்டம். எனவே நமக்கு நேரம் சரியாக இல்லாதபோது உங்களது இதயத்தை இழக்காதீர்கள். காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் துணையாக இருந்தால் அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஐ.நா. பொதுக்குழுக் கூட்டம் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சு பெரும்பாலும் காஷ்மீர் பற்றியே இருந்தது.
அதில் இம்ரான் கான் பேசும்போது, ''ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது பிரதமர் மோடி அரசு. இனிமேல் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற கேள்விக்கே இடமில்லை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் விவகாரத்தால் போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவைக் காட்டிலும் 7 மடங்கு பாகிஸ்தான் சிறிய நாடு. ஆனால், எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சரண் அடைவது அல்லது சுதந்திரத்துக்காகச் சாகும்வரை போரிடுவது. இரு அணு ஆயுதம் தாங்கிய நாடுகள் போரிட்டால், அதன் முடிவு பேரழிவாக இருக்கும் என்பதை உலகத்துக்கு எச்சரிக்கிறேன். இது மிரட்டல் அல்ல, பயம். இவை ஏதும் நடக்காமல் பாதுகாப்பது ஐ.நா.வின் கடமையாகும்” என்று இம்ரான் கான் எச்சரிகை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.