மக்களை மதிக்காத மியான்மர் - 11

மக்களை மதிக்காத மியான்மர் - 11
Updated on
2 min read

ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைவசப்படுத்திய பிறகுதான் இந்தியர்களில் கணிசமானவர்கள் பர்மாவுக்குச் சென்றார்கள். அதுவும் இந்தியாவுடன் பர்மா இணைக்கப்பட்டபோது அங்கு சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிகமானது. இப்படிச் சென்ற இந்தியர்களில் மிகமிக அதிகமானவர்கள் தமிழர்கள். இவர்கள் மியான்மரில் விவசாயத்தில் அதிகம் ஈடுபட்டனர்.

முதலாம் உலகப் போர் முடியும் கட்டத்தில் இந்தியர்களுக்கு எதிரான போக்கு பர்மாவில் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கியது. காரணம் இந்தியர்களின் எண்ணிக்கை வகைதொகை இல்லாமல் பெருகியதுதான். ஒரு கட்டத்தில் ரங்கூனில் பாதி மக்கள்தொகை இந்தியர்கள்தான் என்றானது.

தவிர நகரங்களில் வசித்த தமிழர்கள் (செட்டியார்கள்) வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். அதிக வட்டி வசூலிக்கிறார்கள் என்ற எண்ணம் பர்மியர்களுக்கு ஏற்பட்டது. தவிர நிலத்தை அடமானம் வைத்து உள்ளூர்வாசிகள் கடன் பெறுவது சகஜமானது. கடனை திருப்பித்தராதபோது நிலத்தைத் தங்கள் வசம் எடுத்துக் கொள்ளும் செயலை பர்மியர்கள் விரும்பவில்லை (ஒப்பந்தப்படி அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டிருந்தாலும்).

மே 1930-ல் ரங்கூன் துறைமுகத்தில் இயங்கி வந்த ஓர் ஆங்கிலேயே நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. அங்கு வேலை செய்த இந்தியத் தொழிலாளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையைச் சமாளிக்க பர்மியத் தொழிலாளிகளை அவர்களுக்கு மாற்றாக ஏற்பாடு செய்தது அந்த நிறுவனம். இது தற்காலிக ஏற்பாடுதான்.

என்றாலும் வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்டு இந்தியத் தொழிலாளிகள் மீண்டும் வேலைக்குத் திரும்பியபோது, அவர்களுக்குப் பதிலாக வேலையில் அமர்த்தப்பட்டிருந்த பர்மியர்கள் வாக்குவாதத்திலும், கைகலப்பிலும் ஈடுபட்டனர். இது நகரமெங்கும் பரவியது. இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு உச்சத்தை அடைந்தது. 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொலை செய்யப்பட்டு அவரகள் உடல்கள் நதிகளில் வீசப்பட்டன. பின்னர் கலவரம் அடங்கியது. ஆனால் மனங்களில் இதன் தழும்பு தொடர்ந்தது.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் பர்மாவை ஆக்ரமித்தது. பர்மாவில் வசித்த சுமார் 5 லட்சம் இந்தியர்கள் உயிர்பயம் காரணமாக அசாமுக்கு வந்து சேர்ந்தனர் அதுவும் கால்நடையாகவே. இந்தப் பயணத்தின்போது ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர்.

பின்னர் பர்மா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்தியர்களை அவர்கள் குடிமக்களாக ஏற்கவில்லை. `வசிக்கும் வெளி ஆட்கள்’ என்றுதான் குறிக்கப்பட்டார்கள். 1823-க்கு முன்பாகவே பர்மாவில் வசித்தவர்கள்தான் பர்மியக் குடிமக்கள் என்று புதிய விளக்கத்தைக் கொடுத்தார்கள்.

அதுவும் ராணுவப் புரட்சியைத் தொடர்ந்து நெ வின் தலைமை ஏற்றபோது இந்தியர்கள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேற்றினார். இந்தியர்களின் பல நிறுவனங்களை தேசியமயமாக்கியது ராணுவ அரசு. இதைத் தொடர்ந்து பலரும் இந்தியாவுக்கு வரத் துடிக்க, இந்திய அரசு படகுகளையும், விமானங்களையும் அனுப்பி இந்தியர்கள் தாய்நாட்டுக்கு வர உதவியது. இந்தியாவுக்கும், மியான்மருக்கும் உள்ள உறவு அப்போதிலிருந்து சீர்குலையத் தொடங்கியது.

என்றாலும் கலாச்சாரம் என்கிற அடிப்படையில் இந்துக்களின் தாக்கம் பர்மியர்களிடையே இன்னமும் இருக்கிறது. அது கல்யாணம் மற்றும் காதுகுத்தும் விழாக்களில் அதிகமாகவே எதிரொலிக்கிறது.

ஒருகாலத்தில் (முக்கியமாக 1869-ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டு மியான்மர் ஒரு விவசாய மையம் ஆன பிறகு) தமிழர்கள் பர்மாவில் உள்ள அரசு விளைநிலங்களில் மூன்றில் ஒரு பங்கை தங்கள் வசம் வைத்திருந்தார்கள். இப்போது இந்தியர்கள் அங்கே நாலாந்தரக் குடிமக்கள் போலத்தான் நடத்தப்படுகிறார்கள்.

மியான்மரில் 1962-ல் ராணுவ ஆட்சி தொடங்கியபோது லட்சக்கணக்கான தமிழர்கள் அந்த நாட்டிலிருந்து கிளம்பி தாய்நாட்டுக்கு வந்தார்கள். என்றாலும்கூட கணிசமான தமிழர்கள் இன்னமும் அங்கே இருக்கிறார்கள் சுமார் 10 லட்சம்பேர். அங்கு வாழும் தமிழர்கள் சரளமாக பர்மிய மொழியைப் பேசுகிறார்கள். பர்மியர்களைப் போலவே லுங்கி அணிகிறார்கள். பலரும் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

என்றாலும் பர்மியர்களோடு சீனர்கள்தான் அதிகம் இணைந்து கலந்திருப்பதாக அங்கு சென்று வந்தவர்கள் கூறுகிறார்கள்.

மியான்மரில் வாழும் தமிழர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படிக் காட்டினால் ஆபத்து என்கிற எண்ணமும் இதற்கு அடிப்படையாக இருக்கலாம்.

அவர்கள் சங்கடமான நிலையில்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் மூன்று தலைமுறைகளைத் தாண்டி அவர்கள் அங்கு வாழ்ந்தும்கூட `வெளி ஆட்கள்’ என்று அவர்களை நினைக்கும் நிலை இன்னமும் இருக்கிறது. அதே சமயம் ராணுவத்தின் ஆதரவையும், சீனாவின் நட்பையும் பெரிதும் நாடுகிற தேசம் என்பதால் இந்தியாவும் மியான்மரைப் பொறுத்தவரை பட்டும் படாமலும்தான் நடந்து கொள்கிறது.

(உலகம் உருளும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in