சீனாவில் கோர விபத்து: அதிக அளவு பயணிகள்கொண்ட பேருந்து சரக்கு லாரியுடன் மோதியதில் 36 பேர் பலி

சீனாவில் கோர விபத்து நடந்த சாங்சுன்-ஷென்சென் அதிவேக நெடுஞ்சாலை.
சீனாவில் கோர விபத்து நடந்த சாங்சுன்-ஷென்சென் அதிவேக நெடுஞ்சாலை.
Updated on
1 min read

பெய்ஜிங்,

சீனாவில் சரக்கு லாரி மீது அதிகபட்ச பயணிகளை ஏற்றிவந்த பேருந்து மோதியதில் 36 பேர் இறந்ததாகவும் 36 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிழக்கு ஜியாங்சு மாகாணத்தில் உள்ள எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையொன்றில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நாள் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து யிக்ஸிங் பொது பாதுகாப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது

சாங்சுன்-ஷென்சென் அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று காலை பயணிகள் பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் விதிகளை மீறி அதிகப்பட்சமாக 69 பேர் ஏற்றிவந்துள்ளனர். இதனால் திடீரென பேருந்தின் இடது முன்பக்க டயர் வெடித்துள்ளது.

அதிகபட்ச பயணிகளுடன் சென்ற பேருந்து எதிரே வந்த வாகனத்தை கடக்க முற்படும்போது டயர் வெடித்ததால் தடுமாறி சரக்கு லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 36 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 26 பேருக்கு லேசான காயங்களுடன் மருத்துவமனையிலிருந்து சிகிச்சைப் பெற்று திரும்பிவிட்டனர்.

பேருந்தின் இடது முன் சக்கர டயர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. எட்டு மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பிறகு சாங்சுன்-ஷென்சென் அதிவேக நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் கொடிய சாலை விபத்துக்கள் பொதுவானவை, அங்கு போக்குவரத்து விதிமுறைகள் பெரும்பாலும் மீறப்படுகின்றன அல்லது செயல்படுத்தப்படாமல் போகின்றன.

அதிகாரிகளின் கூற்றுப்படி, கடைசியாகக் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி 2015 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 58,000 பேர் விபத்துக்களில் கொல்லப்பட்டனர்,

போக்குவரத்து சட்டங்களின் மீறல்கள் கிட்டத்தட்ட 90 சதவீத விபத்துக்களுக்கு காரணம் எனவும் இவை அதிகபட்ச உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in